ஜப்பானில் மறதி நோய் உள்ளவர்களை மட்டுமே வேலைக்கு வைத்து நடத்தும் ஒரு ஹோட்டல் மிகப்பெரிய அளவில் புகழ்பெற்று, அந்த ஹோட்டலின் உரிமையாளருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக நாம் ஒரு உணவை ஆர்டர் செய்தால், அந்த உணவுக்கு பதில் வேறு உணவு வந்தால் நாம் கோபப்படுவோம் அல்லது எரிச்சல் அடைவோம். அந்த உணவை திருப்பி அனுப்பிவிட்டு, நாம் ஆர்டர் செய்த உணவை கொண்டு வாருங்கள் என்றுதான் கூறுவோம். ஆனால், ஜப்பானில் உள்ள ஒரு உணவகம் முழுக்க முழுக்க மறதி நோயாளிகளை வைத்து நடத்தப்படுகிறது என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
இந்த ஹோட்டலின் பெயர் ‘தவறான ஆர்டர்கள் உணவகம்’ (The Restaurant of Mistaken Orders). இங்கு ஆர்டர்களை மாற்றி வழங்குவது மெனுவின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக, நீங்கள் இட்லி ஆர்டர் செய்தால், அதற்கு பதில் தோசையை உங்கள் சர்வர் உங்களுக்கு கொண்டு வருவார். தண்ணீருக்கு பதிலாக வேறொரு பானத்தை குடிக்கக் கொண்டு வருவார்கள். ஆனால், சர்வர்களின் இந்த செயல் வெறுப்படைவதற்கு பதிலாக, மனதை கவரும் நகைச்சுவையாகவே பார்க்கப்படுகிறது. இந்த ஹோட்டலுக்கு சென்றாலே நாம் ஆர்டர் செய்தது கிடைக்காது; வேறு ஏதாவது ஒன்றுதான் வரும் என்ற எண்ணத்தில்தான் வாடிக்கையாளர்கள் வருகின்றனர்.
இங்கு வேலை செய்யும் அனைவருமே அல்சைமர் (Alzheimer’s) என்ற ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் மீது பரிதாபம் ஏற்படுவதற்கு பதிலாக ஒரு அன்பு கலந்த பாசம் வெளிப்படுகிறது என்றும், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் நிலைமை குறித்து விழிப்புணர்வு கொண்டு வருவதற்காகவே இந்த உணவகத்தை ஆரம்பித்ததாக இதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
தான் ஒரு முறை மருத்துவமனையில் இருந்த போது பர்கர் ஆர்டர் செய்தபோது, அதற்கு பதிலாக வேறொரு உணவு வந்தது என்றும், முதலில் அந்த உணவை திருப்பிக் கொடுக்க முடிவு செய்தபோதுதான் தனக்கு இப்படி ஒரு வித்தியாசமான யோசனை வந்தது என்றும் அவர் கூறினார். மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கும் ஒரு இல்லமாகவே இந்த உணவகம் செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
பல ஆண்டுகளாக இந்த உணவகம் ஜப்பானில் மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இங்குள்ள ஒவ்வொரு சர்வர்களும் ஆர்டர் செய்ததை கொண்டுவர மாட்டார்கள். அதற்கு இணையாக வேறொரு உணவை கொண்டு வரும்போது ஆர்டர் செய்தவர்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்றும், இன்னும் சொல்லப்போனால் நாம் ஆர்டர் செய்த உணவுக்கு பதிலாக எந்த உணவு வரும் என்று ஆவலோடு காத்து கொண்டிருக்கும் வாடிக்கையாளர்கள் இங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
“மறதி நோயாளிகளும் நம்மை போல மனிதர்கள் தான்; அவர்களுடன் ஏன் நாம் உறவுகளை வளர்த்துக் கொள்ளக்கூடாது?” என்ற கேள்வியை எழுப்பிய இந்த உணவகத்தின் உரிமையாளரின் செயலுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இங்கு வாடிக்கையாளர்கள் செய்யும் ஆர்டர்கள் பெரும்பாலும் மாற்றித்தான் வழங்கப்படுகின்றன என்றும், ஆனால் வாடிக்கையாளர்கள் அதைச் சாதாரணமாக எடுத்துக்கொண்டு சிரித்துக் கொண்டு, அந்த உணவை சர்வ் செய்பவர்களிடம் அன்பு காட்டுவார்கள் என்றும், இந்த உணவகம் ஒரு மனிதநேயத்தின் எடுத்துக்காட்டு என்றும் இந்த உணவகத்தின் வாடிக்கையாளர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகின்றனர்.
“தவறான ஆர்டர்கள் கொடுப்பதில் நிபுணத்துவம் பெற்றது என்பதற்காகவே இந்த பெயரை ஹோட்டலுக்கு வைத்துள்ளதாகவும், இங்கு வேலை பார்க்கும் ஒவ்வொருவரும் மரியாதையாக நடத்தப்படுகிறார்கள் என்றும், 99% வாடிக்கையாளர்கள் இந்த உணவகத்தை விட்டு வெளியேறும் போது மகிழ்ச்சியாக செல்கிறார்கள்” என்றும் இந்த உணவகத்தின் மேனேஜர் தெரிவித்துள்ளார். உலகில் இப்படி ஒரு உணவகம் இருக்கிறது என்பதை பார்த்து இணையப் பயனாளர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். “உண்மையில் இது ஒரு மனிதநேயத்திற்கு எடுத்துக்காட்டு” என்றும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
https://www.instagram.com/p/CO98C9qpjHH/?utm_source=ig_web_copy_link
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
