ஈசிஆர் பங்களாவில் தவெக + காங்கிரஸ் ரகசிய பேச்சு.. பீகார் தேர்தல் முடிந்தவுடன் முக்கிய அறிவிப்பு.. காங். போனால் விசிகவும் போயிடுமே.. திமுக கூட்டணி உடைகிறதா?

வரவுள்ள 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலர் விரும்புவதாகவும், தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகி ஒருவருடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்,…

tvk congress

வரவுள்ள 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலர் விரும்புவதாகவும், தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகி ஒருவருடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், ஈ.சி.ஆர். பங்களாவில் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்போது த.வெ.க. நிர்வாகி, எங்களுடன் கூட்டணி வைத்தால் காங்கிரஸ் கட்சிக்கு எந்த அளவுக்கு பலன் இருக்கும் என்பது குறித்து விளக்கிக் கூறியதாகவும் தெரிகிறது.

அதில் முக்கியமான ஒன்று, விஜய்க்கு கேரளாவில் ஏராளமான ரசிகர்கள் இருப்பதால், எங்களுடன் கூட்டணி வைத்தால் கேரளாவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வரலாம் என்றும், விஜய் ரசிகர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சிக்குதான் ஓட்டுப் போடுவார்கள் என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அதேபோல், புதுவையிலும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கலாம் என்றும், புதுவையிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றும் ஆசை வார்த்தை காட்டி உள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து, காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவரிடம் மும்பையில் தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அவர் பீகார் தேர்தல் முடிந்தவுடன் இது குறித்து முக்கிய முடிவு எடுப்போம் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது.

தமிழக வெற்றி கழகத்துடன் காங்கிரஸ் கட்சி இணைந்தால், 50 முதல் 60 தொகுதிகள் வரை தரப்படும் என்றும், அதுமட்டுமின்றி நான்கு முக்கிய அமைச்சர் பதவியும் தரப்படும் என்றும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, தி.மு.க. கூட்டணியில் வெறும் 25 அல்லது 30 தொகுதிகள் வாங்கி ஆட்சியிலும் பங்கு இல்லாமல் இருப்பதற்கு, தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி சேர்ந்தால் 50 தொகுதிகள் வரை கிடைக்கும், ஆட்சியிலும் பங்கு கிடைக்கும் என்று காங்கிரஸ் கட்சியினர் தற்போது ஆலோசனை செய்வதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சி வெளியேறினால் கண்டிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியும் வெளியேறிவிடும் என்றும், இந்த இரண்டு கட்சிகளும் வெளியேறிவிட்டால் தி.மு.க. கூட்டணி சுக்கு நூறாகி விடும் என்றும் தேர்தல் வியூக நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

ஏற்கனவே ராகுல் காந்தியை விரைவில் விஜய் சந்திக்கவுள்ளார் என்று கூறப்பட்ட நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் சந்தித்ததாக கூறப்படும் செய்தி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. த.வெ.க., காங்கிரஸ் மற்றும் வி.சி.க. ஆகிய மூன்று கட்சிகள் சேர்ந்தால் இரண்டு திராவிட கட்சிகளையும் வீழ்த்தி விடலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர். இவையெல்லாம் நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.