யாரும் இனி ஆட்டோவுல போகாதீங்க.. பஸ்ல போங்க.. பெங்களூரு தொழிலதிபரின் பதிவால் பரபரப்பு.. 2 கார் இருந்தும் யூஸ் இல்லை..!

பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், தனது இரண்டு கார்களும் அலுவலகத்தில் சிக்கிக்கொண்டதால், வீட்டில் இருந்து அலுவலகம் செல்வதற்காக ஆட்டோவில் செல்ல முயன்றதாகவும், ஆனால் பேருந்தில் சென்றதாகவும், பேருந்து பயணம் மிகவும் வசதியாக இருந்ததாகவும் கூறி…

bangalore

பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், தனது இரண்டு கார்களும் அலுவலகத்தில் சிக்கிக்கொண்டதால், வீட்டில் இருந்து அலுவலகம் செல்வதற்காக ஆட்டோவில் செல்ல முயன்றதாகவும், ஆனால் பேருந்தில் சென்றதாகவும், பேருந்து பயணம் மிகவும் வசதியாக இருந்ததாகவும் கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனமான அதர் எனர்ஜியின் இணை நிறுவனர் ஸ்வப்னில் ஜெயின் என்பவர் இந்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார். தன்னுடைய இரண்டு கார்களும் எதிர்பாராத விதமாக அலுவலகத்தில் சிக்கிக்கொண்டதால், வீட்டிலிருந்து அலுவலகம் செல்வதில் சிக்கல் ஏற்பட்டதாகவும், எனவே ஆட்டோவில் செல்ல முடிவு செய்து செயலியில் முயற்சி செய்ததாகவும் அவர் தெரிவித்தார். அப்போது தனது வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் இடையே வெறும் நான்கு கிலோமீட்டர் மட்டுமே இருந்த நிலையில், ஆட்டோ கட்டணம் ₹175 காண்பித்தது என்றும், இதை பார்த்து தான் அதிர்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அதன் பிறகு ஆட்டோ வேண்டாம் என முடிவு செய்து பேருந்தில் சென்றதாகவும், பேருந்து பயணம் மிகவும் வசதியாக இருந்ததாகவும், ₹12 மட்டுமே செலவானது என்றும் அவர் தெரிவித்தார். “₹175 என்பது எனக்கு பெரிய தொகை இல்லை, ஆனால் வெறும் நான்கு கிலோமீட்டருக்கு ₹175 கொடுப்பது என்பது மிகவும் அதிகபட்ச கட்டணம். நாம் வந்த பாதையை மறந்துவிடக்கூடாது.எனவேதான் நான் பேருந்தில் சென்றேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.

பெங்களூரை பொறுத்தவரை பேருந்துகள் தற்போது மிகவும் தரமாகவும், வசதியாகவும் இருப்பதாக ஜெயின் தெரிவித்தார். பெங்களூரு பெருநகர போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகளில் யுபிஐ சேவைகள் உட்பட அனைத்து வசதிகளும் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது பதிவுக்கு நெட்டிசன்கள் மிகவும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். பெங்களூரில் டீலக்ஸ் பேருந்துகள் மட்டுமின்றி மின்சார பேருந்துகளும் இருப்பதாகவும், அவை இதைவிட வசதியாக இருக்கும் என்றும், பயணிகளின் பயண சுமையை வெகுவாக குறைக்கிறது என்றும் நெட்டிசன்கள் பதிலளித்து வருகின்றனர்.

மேலும், பெங்களூரு போக்குவரத்துக் கழகத்தின் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தினால், எந்த பேருந்து எப்போது வரும் என்பதை துல்லியமாக தெரிந்து கொள்ளலாம் என்றும், பெங்களூரில் பேருந்தில் பயணம் செய்வதுதான் செலவு மிச்சம் என்றும், பாதுகாப்பான பயணம் என்றும் பலர் தெரிவித்து வருகின்றனர்.

ஜெயினின் இந்த பதிவுக்குப் பலர் அவருக்குப் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். என்னதான் தொழிலதிபரானாலும், பழைய வாழ்க்கையை மறக்காமல் வீணாக செலவு செய்ய முன்வராத அவரை பாராட்டலாம் என்றும்,அவர் ஆட்டோவுக்கு நான்கு கிலோமீட்டருக்கு ₹175 கொடுக்க மறுத்ததைப் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.