தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறும் தேர்தலுக்கு இப்போதே அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார்கள் என்றும், ஆனால் இப்போது நடத்தப்படும் பிரச்சாரம் மக்கள் மத்தியில் எந்த கவனத்தையும் ஈர்க்காது என்றும், தமிழ்நாட்டை பொறுத்தவரை தேர்தல் காய்ச்சல் என்பது பொங்கல் கழித்து ஜனவரி இறுதியில் தான் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தும் என்றும், அப்போதுதான் விஜய் தீவிரமாக களத்தில் இறங்கிப் பிரச்சாரம் செய்வார் என்றும் கூறப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரதமர் மோடி தேர்தலுக்கு இரண்டு மாதம் இருக்கும் வரை பொறுமையாகத் தன்னுடைய வேலைகளை அமைதியாக பார்த்து, தேர்தலுக்கு இரண்டு மாதம் இருக்கும்போது சூறாவளி பிரச்சாரம் செய்வார். அப்போது பத்திரிகையாளர்கள் மற்றும் மக்கள் கவனம் முழுவதும் அவர் மீது மட்டுமே இருக்கும். அதே பாணியைத்தான் விஜய் கடைப்பிடிக்க இருக்கிறார் என்றும், இப்போதே தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குவது தேவையில்லாதது என்று நினைப்பதாகவும் அவரது வட்டாரங்கள் கூறுகின்றன.
ஆனால், அதே நேரத்தில் புதிய கட்சி என்பதால் தமிழகம் முழுவதும் ஒரு நடைபயணம் அல்லது சுற்றுப்பயணம் தேவை என்பதையும் அவர் உணர்ந்திருக்கிறார். அதற்காகத்தான் அவர் அடுத்தடுத்து திட்டங்கள் போட்டு வருகிறார் என்று கூறப்படுகிறது. ஆனாலும், தேர்தல் பிரச்சாரமாக தீவிரமாக அவர் நாள் முழுவதும் களத்தில் இறங்குவது ஜனவரிக்கு பிறகாகத்தான் இருக்கும் என்றும், அதுவரை கட்சியின் அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்துவது, நிர்வாகிகள் மூலம் தெருமுனை கூட்டங்கள் நடத்துவது, பட்டி தொட்டி எங்கும் நமது கட்சியை அறிமுகம் செய்வது, கொள்கைகளை விளக்குவது ஆகிய பணிகளைச் செய்ய நிர்வாகிகளுக்கு அவர் உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம், கன்னியாகுமரி முதல் சென்னை வரை ஒரு சுற்றுப்பயணத்தையும் நடத்த விஜய் திட்டமிட்டிருப்பதாகவும், இது குறித்த அறிவிப்பும் விரைவில் வரும் என்றும் கூறப்படுகிறது.
விஜய்க்கு ஏற்கனவே 20 முதல் 25 சதவீத வாக்குகள் இருப்பதாக தேர்தல் வியூக நிபுணர்கள் கூறிவரும் நிலையில், அவர் முழுமையாக களத்தில் இறங்கித் தீவிர பிரச்சாரம் செய்தால் வாக்கு சதவீதம் இன்னும் அதிகரிக்கும் என்றும், 2026 தேர்தலில் தி.மு.க. – அ.தி.மு.க. என்ற இரண்டு பாரம்பரிய கட்சிகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு கண்டிப்பாக அவர் ஆட்சியைப் பிடிப்பார் என்றும் கூறப்பட்டு வருகிறது.
ஆனால், அதே நேரத்தில், “இதெல்லாம் நடைமுறையில் சாத்தியமா? அனுபவம் உள்ள இரண்டு திராவிட கட்சிகளின் தலைவர்களே இப்போது பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்ட நிலையில், விஜய் ஜனவரி மாதம் பிரச்சாரத்தை தொடங்கி என்ன சாதிக்க முடியும்?” என்ற கேள்வியையும் சிலர் எழுப்பி வருகின்றனர்.
மொத்தத்தில், மோடி பாணியில் விஜய் கடைசி நேர பிரச்சாரத்தை கையில் எடுப்பாரா அல்லது தி.மு.க. – அ.தி.மு.க. தலைவர்களை போல அதற்கு முன்பே பிரச்சாரத்தை தொடங்குவாரா? அப்படியே பிரச்சாரம் செய்தாலும் அவரது பிரச்சாரம் மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு எடுபடும் என்பதை எல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Tamil Nadu Political Arena Heats Up: Vijay’s Election Strategy – Following Modi’s Footsteps?
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
