துரை வைகோ தற்போது எம்.பி. ஆக இருக்கும் நிலையில், அவருக்கு மத்திய அமைச்சர் பதவி வேண்டும் என்ற நிபந்தனையுடன் அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியில் மதிமுக சேர இருப்பதாகவும், இதற்காக ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுவது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கூட்டணியில் குழப்பங்கள்
கடந்த 2021 மற்றும் 2024 ஆம் ஆண்டு தி.மு.க. கூட்டணியில் இருந்த கட்சிகள் அப்படியே 2026 இல் இருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சி விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. வந்தால் விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியேறும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
மதிமுக – தி.மு.க. உறவில் விரிசல்?
இந்த நிலையில், மதிமுக கடந்த சில மாதங்களாகவே தி.மு.க. தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மதிமுகவில் உள்ள மூன்று பிரபலங்கள் தி.மு.க.வில் இணைந்தபோது, ஸ்டாலின் அவர்களே வரவேற்று தங்கள் கட்சியுடன் இணைத்து கொண்டதாகவும், கூட்டணி கட்சியில் உள்ள தலைவர்களை ஒரு கட்சியில் இணைத்துக்கொள்வது அரசியல் நாகரிகமற்றது என்றும் விமர்சனம் செய்யப்பட்டது.
மல்லை சத்யா – வைகோ மோதல்
இந்த நிலையில் தான் மல்லை சத்யா போன்றோர் தற்போது மதிமுகவில் விஸ்வரூபம் எடுத்துள்ளனர். “மகனுக்காகக் கட்சியை அடகு வைக்கிறார்” என்றும், “தன்மீது துரோகி என்ற வீண் பழி சுமத்துகிறார்” என்றும் மல்லை சத்யா விமர்சனம் செய்து கொண்டிருக்கும் நிலையில், வைகோவும் பதிலடி கொடுத்து வருகிறார்.
மதிமுகவின் கூட்டணி நிலைப்பாடு
மல்லை சத்யா விலகுவதற்கு முக்கிய காரணம், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மதிமுக இணைய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், துரை வைகோவுக்கு மத்திய அமைச்சர் பதவிக்கு ரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே, 2026 தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மதிமுக இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அ.தி.மு.க.வுக்கு ஆபத்தா?
ஆனால், அதே நேரத்தில் தி.மு.க. கூட்டணியிலிருந்து மதிமுக விலகினால்,மதிமுகவில் உள்ள முக்கிய தலைவர்களை தி.மு.க. கொண்டுவரும் முயற்சியை செந்தில் பாலாஜி உட்பட சில தலைவர்கள் செய்வார்கள் என்றும், அப்போது மல்லை சத்யா உள்பட பல பிரபலங்கள் மதிமுகவில் இருந்து விலகி திமுகவில் சேர்வார்கள் என்றும் மதிமுக சுக்கு நூறாக உடைந்து நொறுங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தொண்டர்களின் ஆதங்கம்
மொத்தத்தில், “தன்னுடைய மகனுக்காக மதிமுக என்ற கட்சியை வைகோ சீரழிக்கப் பார்க்கிறார்” என்றும், “அவரிடம் ஆரம்ப காலத்தில் இருந்து உடனிருந்தவரை துரோகி என்று கூறியவர் மற்றவர்களை அவர் எப்படி மதிப்பார்” என்றும் மதிமுக தொண்டர்களும், முக்கிய நிர்வாகிகளும் புலம்பி வருவதாக கூறப்படுகிறது. இதே நிலை தொடர்ந்தால், பாமக போலவே, மதிமுகவும் தன்னுடைய வாக்கு சதவீதத்தை சுத்தமாக இழந்துவிடும் என்றுதான் அரசியல் வியூக நிபுணர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
