பசிபிக் பெருங்கடலில் உள்ள குவாம் தீவில் உள்ள ஒரு தொலைதூர குகையில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 3,500 ஆண்டுகள் பழமையான மட்பாண்டங்களுக்குள் புதைந்திருக்கும் நெல் உமிகள், அரிசியை கண்டுபிடித்துள்ளனர். . இந்த கண்டுபிடிப்பு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பசிபிக் கடலில் உள்ள தீவுகளில் அரிசி விளைவிக்கவே முடியாது. மோசமான மண், சீரற்ற மழைப்பொழிவு மற்றும் கரடுமுரடான நிலப்பரப்பு, சவாலான சுற்றுச்சூழல் காரணங்களால் அங்கு அரிசியை வளர்ப்பது கடினம். குவாமில் அரிசியின் இருப்பு நீண்ட காலமாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு புதிராகவே இருந்தது. பண்டைய குடியேற்றவாசிகள் அதை தங்களுடன் கொண்டு வந்தார்களா அல்லது அது பின்னர் அறிமுகப்படுத்தப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த இதுவரை நேரடி ஆதாரம் எதுவும் இல்லை.
மத்திய அல்லது வடக்கு பிலிப்பைன்ஸில் இருந்து ஆரம்பகால குடியேற்றவாசிகள் தங்கள் தேவைகளுக்கு கடல் பயணங்களில் அரிசியை கொண்டு சென்றார்கள் என்பதை இந்த ஆய்வு உறுதிப்படுத்துகிறது. இந்த குடியேற்றவாசிகள், இன்றைய சமோரோ மக்களின் மூதாதையர்கள், சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன்பு குவாம் மற்றும் மரியானாவில் உள்ள அருகிலுள்ள தீவுகளை அடைந்தனர். இது தொலைதூர ஓசியானியாவில் குடியேறிய முதல் மனிதர்கள் அவர்கள்தான் என்பதை குறிக்கிறது.
ஆரம்பகால ஆஸ்ட்ரோனேசிய மொழி பேசும் மாலுமிகள் மிகவும் புத்திசாலிகளாக இருந்துள்ளனர் . அவர்கள் நட்சத்திரங்கள், கடல் நீரோட்டங்கள் மற்றும் காற்று முறைகள் பற்றிய நுட்பமான அறிவை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்களை அவர்கள் கடந்து சென்றனர். ஆனால் வழிசெலுத்தலுக்கு அப்பால், அவர்கள் எந்த தாவரங்களை கொண்டு வர வேண்டும் என்பது போன்ற கவனமான கலாச்சார முடிவுகளையும் எடுத்தனர்.
ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குவாமில் உள்ள ரிடிடியன் கடற்கரை குகையில் தங்கள் அகழ்வாராய்ச்சியை செய்தபோது தான், பண்டைய மட்பாண்டங்களில் பொதிந்திருந்த நெல் உமிகளை அவர்கள் அடையாளம் கண்டனர்.
இந்த உமிகள் மட்பாண்ட உற்பத்தியின் ஒரு பகுதியாக இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. எனவே மண்பாண்டங்களில் அரிசி சேமிகப்பட்டு இருந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆரம்பகால பசிபிக் தீவுவாசிகளுக்கு அரிசி ஒரு முக்கிய உணவுப் பொருளாக மட்டும் இருக்கவில்லை. அரிசியை சமோரோ மக்கள் துக்கம் அல்லது ஆன்மீக சடங்குகள் போன்ற சிறப்பு சந்தர்ப்பங்களுக்கு பயன்படுத்தினர்.
ராபர்ட் ப்ளஸ்ட் என்ற புகழ்பெற்ற மொழியியலாளர், ஆரம்பகால ஆஸ்ட்ரோனேசிய புலம்பெயர்ந்தோர் அரிசி போன்ற தாவரங்களை தங்கள் கலாச்சார கருவிப்பெட்டியின் ஒரு பகுதியாக கொண்டு சென்றதாக நீண்ட காலமாக கோட்பாடு செய்திருந்தார். இந்த ஆய்வு அவரது கருத்தை உறுதிப்படுத்துகிறது.
குவாமில் உள்ள ஒரு குகையில் 3,500 ஆண்டுகள் பழமையான நெல் உமிகளை கண்டுபிடித்த ஆய்வு, மனிதகுலத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க ஆய்வுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
