4 முனை போட்டி என்றால் திமுகவுக்கு தான் லாபம்.. விஜய்யால் அதிமுக கூட்டணிக்கு பெரும் ஆபத்து.. பாமக சோலி முடிஞ்சிருச்சு.. பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் நான்கு முனை போட்டி உறுதி செய்யப்பட்டால், தி.மு.க. வெற்றி உறுதி என்றும், தி.மு.க. கூட்டணி வாக்குகளை விட அதிகமாக அ.தி.மு.க. கூட்டணியின் வாக்குகளைத்தான் விஜய் உடைக்கிறார்…

mani stalin

தமிழகத்தில் வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் நான்கு முனை போட்டி உறுதி செய்யப்பட்டால், தி.மு.க. வெற்றி உறுதி என்றும், தி.மு.க. கூட்டணி வாக்குகளை விட அதிகமாக அ.தி.மு.க. கூட்டணியின் வாக்குகளைத்தான் விஜய் உடைக்கிறார் என்றும் பத்திரிகையாளர் மணி கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1989 ஆம் ஆண்டு அ.தி.மு.க. இரண்டாக உடைந்தபோது தி.மு.க. எளிதில் வெற்றி பெற்றது. அதேபோல்தான் தற்போது தி.மு.க.வுக்கு எதிரான வாக்குகள் மூன்றாக பிரியும் போது, தி.மு.க. எளிதில் வெற்றி பெற்றுவிடும் வாய்ப்பு இருப்பதாக பத்திரிகையாளர் மணி தெரிவித்தார்.

விஜய் கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளின் வாக்குகளையும் பிரிக்கிறார் என்பது உண்மைதான். ஆனால், அதே நேரத்தில், தி.மு.க. வாக்குகளை விட அவர் அ.தி.மு.க. வாக்குகளைத்தான் அதிகமாகப் பெறுகிறார் என்றும் மணி தெரிவித்தார். இதன் காரணமாக, அ.தி.மு.க.வின் ஓட்டுகள் மிகவும் குறைந்துவிடும் என்றும், அ.தி.மு.க.வுக்கு மிகப்பெரிய சேதாரம் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

“பா.ம.க. கிட்டத்தட்ட சோலி முடிந்துவிட்டது என்றும், பா.ம.க. என்ற கட்சிக்கு டாக்டர் ராமதாஸ் கொள்ளி வைத்துவிட்டார் என்றும், இனி அப்பாவும் பிள்ளையும் சேர்ந்தால் கூட அந்த கட்சி தேராது” என்று கூறிய மணி, “பா.ம.க.வின் ஓட்டுகள் அனைத்துமே கொத்துக்கொத்தாக விஜய்க்கு சென்று கொண்டிருக்கிறது என்றும், இனி பா.ம.க. தேறவே முடியாது” என்றும் அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே பல அரசியல் வியூக நிபுணர்கள் நான்கு முனை போட்டி ஏற்பட்டால் கண்டிப்பாக தி.மு.க. வெற்றி பெற்றுவிடும் என்றும், இரண்டாவது இடத்தில் விஜய் வருவதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறிவந்தனர். ஆனால், அதே நேரத்தில் 2031 ஆம் ஆண்டு தி.மு.க. Vs விஜய் என்ற போட்டி வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது என்றும், அதற்கு ஐந்தாண்டுகள் விஜய் பொறுமை காக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.

கிட்டத்தட்ட அதே கருத்தைத்தான் தற்போது பத்திரிகையாளர் மணியும் தெரிவித்துள்ளார். நான்கு முனை போட்டியில் தி.மு.க.வுக்கு ஆட்சி அமைக்க வாய்ப்பு இருந்தாலும், அடுத்த தேர்தலில் விஜய்யால் தி.மு.க.வுக்கு பெரும் சவால் என்றும் அவர் கூறினார்.