“விஜய் ஒரு விஷயத்தில் இறங்க மாட்டார், அப்படி இறங்கிவிட்டால் அதை முடிக்காமல் விட மாட்டார்” என்று தமிழக வெற்றிக் கழகத்தின் ராஜ்மோகன் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. “2026 ஆம் ஆண்டுக்கு முன்னால் விஜய் போராளியாக இருப்பார். 2026 ஆம் ஆண்டுக்கு பின்னால் அவர் முதலமைச்சராக இருப்பார்” என்று ராஜ்மோகன் தெரிவித்தார்.
“2026 ஆம் ஆண்டு தேர்தலில் சிங்கிள் மெஜாரிட்டியில் வெற்றி பெற்று தலைமை செயலகத்திற்கு விஜய் செல்வார். செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று சொல்லி, ஜோசப் விஜய் என்ற பெயரை சொல்லி அவர் ஆட்சி அமைப்பார்” என்றும் ராஜ்மோகன் தெரிவித்தார். வெற்றிக்குத் தேவையான 118 தொகுதிகளை சிங்கிள் மெஜாரிட்டியில் தாங்கள் ஜெயிப்போம், பொறுத்திருந்து பாருங்கள் என்று ஒரு கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
ஆளுங்கட்சியான தி.மு.க. சார்பிலேயே ஒரு ரகசிய சர்வே எடுத்தார்கள். அதிலே 27% தமிழக வெற்றி கழகத்திற்கு வாக்கு கிடைக்கும் என்று கூறப்பட்டிருந்தது. அதன் பிறகுதான் தி.மு.க.வினருக்கு குளிர் ஜுரம் ஸ்டார்ட் ஆகிவிட்டது” என்று ராஜ்மோகன் தெரிவித்தார். “எங்கள் கொள்கையில் மிகவும் முரண்பாடு உடைய கருத்துக்களை கொண்டவர் ரங்கராஜ் பாண்டே. அவர் எங்களுக்கு ஆறு சதவீதத்திற்கும் அதிகமாக கொடுத்ததில்லை. ஆனால், அவருடைய சர்வேயில் 22 சதவீதம் எங்களுக்கு வாக்கு கிடைக்கும் என்று கூறி ஷாக் ஆனார்.”
“தி.மு.க.வுக்கு ஓட்டுப் போட்டவர்களில் நானும் ஒருவன். இந்த விடியல் ஆட்சியில் அவர்கள் சொன்ன எந்த ஒரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. அதன் பிறகு ஆய்வு செய்தபோதுதான் எதையுமே நிறைவேற்றவில்லை என்பது தெரிகிறது” என்று கூறிய ராஜ்மோகன், “லாக் அப் டெத்தில் இருந்த 24 குடும்பங்களுக்காக நாங்கள் சட்ட நடவடிக்கையை தொடங்கியுள்ளோம். எங்கள் தலைவர் பர்சனலாக அவர்களிடம் நம்பிக்கை அளித்துள்ளார். அவர் ஒன்றை தொட்டால் விடவே மாட்டார். அவரை மாதிரி அழுத்தமான ஆளை நீங்கள் பார்க்கவே முடியாது” என்று கூறினார்.
மேலும், “முதல் முறையாக தன்னை கிண்டல் செய்து வந்த ஒரு புகைப்படத்தை அவர் ஃபிரேம் போட்டு தன்னுடைய வீட்டில் வைத்திருக்கிறார். அதே பத்திரிகை அவரை சூப்பர் ஸ்டார் என்று சொன்னதையும் ஃபிரேம் போட்டு வைத்திருக்கிறார். அவர் ஒரு காரியத்தை நினைத்துவிட்டால் அதை முடிக்காமல் விடமாட்டார்” என்றும் ராஜ்மோகன் தெரிவித்தார்.
“நாங்கள் போராட்டம் நடத்திய இடத்திலிருந்து தொட்டுவிடும் தூரம்தான் தலைமை செயலகம். நீங்கள் தீர்வு கொண்டு வரவில்லை, நான் வருவேன், மக்களை கூட்டிக்கொண்டு வருவேன் என்று எங்கள் தலைவர் விஜய் சொல்லி இருக்கிறார். அடுத்த கட்ட போராட்டம் பரந்தூர் போராட்டம் தான்” என்றும், “இந்த விஷயத்தில் நீங்கள் சரியான தீர்வு எடுக்கவில்லை என்றால் விவசாயிகளை போராளிகளாக மாற்றவும் நாங்கள் தயங்க மாட்டோம்” என்றும் அவர் தெரிவித்தார். மேலும், அவர் மீதுள்ள ஒரே விமர்சனம், “இன்னும் மீடியாவை அவர் சந்திக்கவில்லை என்பதுதான். அதையும் அவர் விரைவில் சந்திப்பார்” என்றும் ராஜ்மோகன் தெரிவித்தார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
