அவர் செத்து 31 வருஷம் ஆச்சு.. அவர் என் தாத்தாங்க.. அப்பாவித்தனமான கேள்வி கேட்ட நெட்டிசனுக்கு அனன்யா பிர்லா கொடுத்த பதில் வைரல்..!

அனன்யா பிர்லாவின் சமூக வலைத்தளமான X-ல் நடந்த ‘என்னிடம் எதையும் கேளுங்கள்’ என்ற ஒரு உரையாடலில் ஒரு பயனர் “நீங்க அந்த பிர்லாவுடைய மகள்தானே, சிமெண்ட் கம்பெனி பிர்லாதானே?” என்று ஒரு விசித்திரமான மற்றும்…

ananya

அனன்யா பிர்லாவின் சமூக வலைத்தளமான X-ல் நடந்த ‘என்னிடம் எதையும் கேளுங்கள்’ என்ற ஒரு உரையாடலில் ஒரு பயனர் “நீங்க அந்த பிர்லாவுடைய மகள்தானே, சிமெண்ட் கம்பெனி பிர்லாதானே?” என்று ஒரு விசித்திரமான மற்றும் வேடிக்கையான கேள்வியை கேட்டபோது சமூக வலைத்தளமே காமெடியாக மாறியது.

இசைக் கலைஞராகவும், தொழிலதிபராகவும் அறியப்படும் அனன்யா, இந்தியாவின் மிகப்பெரிய வணிக நிறுவனமான ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவரான கோடீஸ்வரர் குமார் மங்கலம் பிர்லாவின் மூத்த மகள் ஆவார். இந்த குழுமம் சிமெண்ட் மற்றும் உலோகத் துறைகளில் முன்னணியில் உள்ளது.

ஆனால், அனன்யா அந்த கேள்வியை புறக்கணிக்கவோ அல்லது தட்டிக்கழிக்கவோ செய்யாமல், ஆன்லைனில் அனைவரையும் கவர்ந்த கூர்மையான நகைச்சுவையுடன் பதிலளித்தார்: “ஆமாங்க. நான் கடைசியாக பார்த்தபோது அல்ட்ராடெக் தான் பேரு.” ஆதித்யா பிர்லா குழுமத்தின் கீழ் இந்தியாவின் மிகப்பெரிய சிமெண்ட் உற்பத்தியாளரான அல்ட்ராடெக் சிமெண்ட்டை குறிப்பிட்டு அவர் அளித்த பதில், விரைவாக வைரலானது. இது ஒரு லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், இணைய பயனர்களிடமிருந்து ஒரு வேடிக்கையான எதிர்வினைகளையும் பெற்றது.

பலரும் அனன்யா பிர்லாவின் நகைச்சுவையையும், நேர்மையையும் பாராட்டினர். அவரது பதிலை, எதிர்பாராத கேள்விகளை எப்படி நேர்த்தியாகக் கையாள வேண்டும் என்பதற்கு ஒரு சரியான எடுத்துக்காட்டு என்று வர்ணித்தனர். சமூக வலைத்தள பயனர்கள் அந்த கேள்வி அப்பாவித்தனமானதா? அல்லது இந்தியாவின் பிரபலமான வணிக குடும்பங்கள் குறித்த ஒரு ஆர்வத்தின் பிரதிபலிப்பா என்று விவாதித்தபோது, “நகைச்சுவையையும் தாராள மனப்பான்மையையும் அழகாக சமநிலைப்படுத்திவிட்டார் அனன்யா என்றும், கேள்வி கேட்டவர் பாவம் குழம்பிப் போயிருப்பார், அவரைமன்னித்து விடுங்கள்” என்பது போன்ற கருத்துகள் குவிந்தன.

மேலும் இன்னொரு பயனர் அனன்யா பிர்லாவிடம், நீங்கள் ஆதித்யா பிர்லாவின் சகோதரியா? என்று அப்பாவித்தனமான கேட்டதற்கு ,’நீங்கள் சீரியஸாகத்தான் கேட்கிறீர்களா? ஒரு கேள்வியை கேட்பதற்கு முன் கூகுளில் செக் செய்யலாமே? ஆதித்ய பிர்லா என் தாத்தா, அவர் இறந்து 31 வருடங்கள் ஆகிறது’ என்று பதிலளித்தார். இந்த பதிலுக்கு பிர்லா குடும்பத்தின் பி.ஆர்.ஓக்கள், அம்பானி குடும்பத்தின் பி.ஆர்.ஓக்கள் போல் செயல்படவில்லை என தெரிகிறது என்பது போன்ற கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.

பிர்லா குடும்பத்தினர் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு தனியுரிமையை பராமரித்து வருகின்றனர், இதுதான் பொதுமக்களிடையே இத்தகைய குழப்பங்களுக்கு வழிவகுக்கிறது என்று சிலர் சுட்டிக்காட்டினர்.

தனது இசை ஆர்வம் ஒரு பக்கம், இன்னொரு பக்கம் தனது தொழில் என பயணத்தை தொடரும் அனன்யா பிர்லா இந்த வைரல் பதிவு மூலம், பொது மக்களுடன் தன்னை உண்மையாக இணைக்க எப்படி உதவும் என்பதை அவர் காட்டியுள்ளார்.

அனன்யா தற்போது கிராசிம் (Grasim), ஹிண்டால்கோ (Hindalco) மற்றும் ஏ.பி.எஃப்.ஆர்.எல். (ABFRL) போன்ற ஆதித்யா பிர்லா நிறுவனங்களின் குழுக்களில் உள்ளார். 17 வயதிலேயே ஸ்வதந்திர மைக்ரோஃபின் (Svatantra Microfin) நிறுவனத்தை நிறுவினார். அதை தொடர்ந்து, இகாய் அசை (Ikai Asai) என்ற ஆடம்பர தளத்தையும் தொடங்கினார். இத்தனை சாதனைகள் இருந்தபோதிலும், அவர் தனது நடத்தை எளிமையாகவே வைத்திருக்கிறார். அவர் தான் ஆதித்ய பிர்லாவின் வாரிசு என்று பலருக்க்கு தெரியாது. இந்த குணம் அவரை இந்தியாவின் இளம் சாதனையாளர்களிடையே தனித்து நிற்க வைக்கிறது.

https://x.com/ananya_birla/status/1944056035825565958