தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருக்கும் நிலையிலேயே, ஆளுங்கட்சியாக இருக்கும் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவரும் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர். இது தேவையில்லாதது என்று பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.
“எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு மாதம் இருக்கும்போதுதான் செல்வார்கள். ஆனால், தற்போது 8 மாதங்கள் இருக்கும்போதே தங்களுடைய இருப்பை காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவரும் மக்களைத் தேடி சென்றுள்ளனர்,” என்று அவர் கூறியுள்ளார்.
“ரோடு ஷோ (Road Show) என்பது பிரதமர் மோடி ஆரம்பித்து வைத்த ஒரு விஷயம். அவர் தேர்தல் நடக்கும் போது மட்டும்தான் செய்வார். ஆனால், தேர்தலுக்கு எட்டு மாதத்திற்கு முன்பே மோடியை பார்த்து காப்பியடித்து ரோட் ஷோவை முதலமைச்சர் ஸ்டாலின் செய்கிறார்,” என்று பத்திரிகையாளர் மணி தெரிவித்தார்.
மக்களின் கேள்விகளும், வாக்குறுதிகளின் நிலையும்
“மக்களைத் தேடி ஒரு முதலமைச்சர் செல்வது என்பது நல்ல விஷயம் தான். ஆனால், மக்கள் கேட்கும் கேள்விக்கு உங்களால் பதில் சொல்ல முடியுமா? நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்படவில்லை. காசு கொடுத்து கூட்டி வரப்பட்ட கூட்டம் இந்தக் கேள்வியை கேட்காது. ஆனால், உண்மையாகவே நீங்கள் வீடு வீடாக செல்லும்போது, அங்கு யாராவது ஒருவர் உங்களை பார்த்து ‘நீங்கள் கொடுத்த வாக்குறுதி என்ன ஆச்சு?’ என்று கேட்டால், அதற்கு முதலமைச்சர் என்ன பதில் சொல்வார்?” என்றும் பத்திரிகையாளர் மணி கேள்வி எழுப்பியுள்ளார்.
அஜித் குமார் மரணம்: கேள்விக்குள்ளாகும் முதலமைச்சரின் செயல்பாடு
“மக்களைத் தேடி இவ்வளவு தூரம் செல்லும் நீங்கள், ஏன் அஜித் குமார் வீட்டுக்கு செல்லவில்லை? இதற்கு முன்பு ‘லாக்கப் டெத்’ட்டில் இறந்த நபர்களை ஏன் சென்று பார்க்கவில்லை?” என்று கேள்வி எழுப்பிய மணி, “முதலமைச்சர் செல்லாவிட்டால் கூட பரவாயில்லை, காவல்துறை உயர் அதிகாரிகள் கூட செல்லவில்லை. ஏன், துணை முதலமைச்சர் கூட செல்லவில்லை?” என்று கூறினார்.
“ஒரு முதலமைச்சர் பணியின் சுமையாக இருக்கும்போது, அவரது வேலைகளில் பாதியை குறைப்பதற்காகத்தான் துணை முதலமைச்சர் இருக்கிறார். ஆனால், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் அஜித் குமார் வீட்டுக்கு செல்லாதது அதிர்ச்சியளிக்கிறது” என்றும் பத்திரிகையாளர் மணி தெரிவித்தார்.
ரோடு ஷோக்களின் அரசியல் தந்திரம்
“ரோடு ஷோ என்பது தேர்தல் நேரத்தில் கையாளப்படும் ஒரு அரசியல் தந்திரமே தவிர, இதனால் மட்டுமே முழுக்க முழுக்க வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைத்தால் அது நடக்காத காரியம். மக்களுக்காக என்னென்ன திட்டங்கள் செய்துள்ளீர்கள், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன திட்டங்கள் செய்வீர்கள் என்பதை எடுத்து கூறினால் மட்டுமே மக்களின் வாக்கு உங்கள் பக்கம் திரும்பும் என்றும், வெறும் ரோடு ஷோவும், காசு கொடுத்து ஆட்களை கூட்டி வந்து நடத்தும் கூட்டத்திற்கும் மக்கள் மயங்க மாட்டார்கள்” என்றும் மணி தெரிவித்தார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
