தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், இன்று நடந்த அஜித் குமார் மரணத்திற்கான நீதி கேட்டு போராட்டத்தில் கலந்துகொண்டு ஆவேசமாக பேசியதை அடுத்து, “விஜய் சரியான ரூட்டில் தான் போகிறார்” என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், அதே நேரத்தில், “விஜய்யின் இந்த ஆவேசம் போதாது என்றும், தி.மு.க. போன்ற வலிமையான கட்சியையும், கூட்டணியையும் சந்திக்க இன்னும் ‘தர லோக்கல் லெவலில்’ அவர் களத்தில் இறங்க வேண்டும்” என்றும் கூறி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அஜித் குமாரின் இந்த ஒரு மரணம் பற்றி மட்டும் போராட்டம் நடத்தினால் போதாது. ஏற்கனவே நடந்த 24 லாக் அப் டெத் மரணங்களுக்கும் தனித்தனியாக ஒவ்வொரு இடத்திலும் போய் போராட்டம் நடத்த வேண்டும் என்றும், அதுமட்டுமின்றி தி.மு.க. ஆட்சியில் என்னென்ன ஊழல்கள் நடந்துள்ளது என்பதை மக்களுக்கு எளிதில் புரியும் வகையில் ஆவேசமாக பேச வேண்டும் என்றும், குறிப்பாக டாஸ்மாக் விவகாரத்தை கையில் எடுத்தாலே தி.மு.க. ஆடிப் போய்விடும்” என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
“மக்களுக்கு என்றுமே பரபரப்பாக பேசுபவர்கள், ஆவேசமாகப் பேசுபவர்களை அதிகம் பிடிக்கும் என்றும், சீமானுக்கு எட்டு சதவீத வாக்குகள் கிடைத்ததற்கு காரணமே அவரது ஆவேசமான பேச்சுதான் என்றும் கூறி வருகின்றனர்.
இப்போதுதான் விஜய்யை ஒரு நடிகராக பார்ப்பதை விட்டுவிட்டு, ஒரு அரசியல் கட்சி தலைவராக மக்கள் பார்க்க தொடங்கிவிட்டனர் என்றும், அவரது பேச்சுவழக்கில் உள்ள ஆழம், எதிரியைக்கூட அவர் மரியாதையாக விமர்சனம் செய்வது மக்களுக்கு மிகவும் பிடித்துள்ளது என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். விஜய்யின் நாகரீகமான விமர்சனம் நிச்சயம் மக்கள் மத்தியில் ஒரு நல்ல அபிப்பிராயத்தை விஜய் மீது ஏற்படுத்தும் என்றும், குறிப்பாக ‘சார்’ என்பது மரியாதையாகவும் இருக்கும், கிண்டலாகவும் இருக்கும் என்றும், இதை அவர் தாராளமாக தேர்தல் வரை தொடரலாம் என்றும் அவருக்கு அறிவுரை கூறி வருகின்றனர்.
விஜய் இனிமேல் தமிழகம் முழுவதும் புயலாக சுற்றுப்பயணம் செய்ய வேண்டும் என்றும், “புயல் எப்போதும் புழுதியிலிருந்துதான் வரும்” என்பதற்கு ஏற்ப அவர் புயலாக மாறினால் கண்டிப்பாக எதிரணியில் புழுதி கிளம்பும் என்றும் அவருக்கு நெருக்கமான அரசியல் ஆலோசகர்கள் அறிவுரை கூறி வருகின்றனர்.
மொத்தத்தில், விஜய் களத்தில் இறங்கிவிட்டார், தொடர்ந்து இதே போல் செயல்பட வேண்டும் என்றும், இடையில் இடைவெளி விடக்கூடாது என்பது மிகவும் முக்கியம் என்றும் கூறப்படுகிறது. விஜய்க்கு ஏற்கனவே 20 சதவீத வாக்குகள் இருப்பதாக அரசியல் வியூக நிபுணர்கள் கூறிவரும் நிலையில், அவர் கள அரசியலில் தீவிரமாக இறங்கினால், கண்டிப்பாக அது 30 சதவீதமாக மாற வாய்ப்பு இருக்கிறது என்றும், தனித்தே ஆட்சியை பிடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறி வருகின்றனர்.
இருப்பினும், 50 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியமாக அடிப்படை கட்டமைப்பு உள்ள ஒரு கட்சியையும், வலுவான கூட்டணி கட்சிகளை வைத்துள்ள ஒரு கூட்டணியையும் வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல. ஆனால், “முயற்சி திருவினையாக்கும்” என்பதுபோல், விஜய்யின் முயற்சிகள் தான் அவரது கட்சியின் ரிசல்ட்டையும் நிர்ணயிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
