ஒரு முறை ஆட்சியைப் பிடித்துவிட்டால், நல்லாட்சி நடத்தி மக்கள் மனதில் இடம் பெற்று, அடுத்தடுத்து தொடர்ச்சியாக எம்.ஜி.ஆர். போல் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் அடித்தளம் ஆழமாக போடப்படுவதாக, விஜய்க்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மாறி மாறி தமிழகத்தை ஆட்சி செய்து வருகின்றன. இந்த இரண்டு அரசுகளிலும் ஒரு சில நல்ல திட்டங்கள் இருந்தாலும், பெரும் பிரச்சனையாக இருப்பது ஊழல் தான். இரு அரசுகளும் மாறி மாறி ஊழல் செய்து வந்தன என்பதும், அதிலும் ஒரு முதல்வர் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தையே சந்திக்க வேண்டிய நிலை இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. “அதற்காக நீதிமன்றத்தை சந்திக்காத முதல்வர்கள் ஊழல் செய்யவில்லை என்று அர்த்தம் அல்ல என்றும், தமிழகம் தான் ஊழலுக்கு இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருந்து வருகிறது” என்றும் நடுநிலை வாக்காளர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், காமராஜருக்கு பிறகு தமிழகத்தில் ஊழல் இல்லாத தலைவர், மக்களுக்கு உண்மையாகவே நல்லது செய்யும் தலைவர் வருவாரா என ஒரு பிரிவினர் தமிழகத்தில் ஏங்கிக்கொண்டிருந்தனர் என்பதும், அந்த ஏக்கத்தைப் போக்க விஜயகாந்த் வருவாரா, கமல்ஹாசன் வருவாரா ரஜினிகாந்த் வருவாரா என்று மக்கள் ஏங்கிக் கொண்டிருந்த நிலையில், ரஜினி அரசியலுக்கு வரவில்லை; “வந்த மற்ற இருவர்களும் ஏமாற்றத்தைதான் தந்தார்கள்” என்பதுதான் நடுநிலை வாக்காளர்களின் கூற்றாக உள்ளது.
இந்த நிலையில் தான், தமிழகத்தின் விடிவெள்ளியாக, கடைசி நம்பிக்கையாக விஜய் அரசியலுக்கு வந்துள்ளார் என்பதும், அவருக்கு பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவரே கோடிக்கணக்கில் பணம் வைத்துள்ளதால், அவர் தூய்மையான, ஊழல் இல்லாத ஆட்சியை அமைப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், “சிஸ்டம் சரியில்லை” என்பதும், 50 ஆண்டுகளாக ஊழலிலே திளைத்துவிட்ட அதிகாரிகளை ஒரே நாளில் மாற்றுவது என்பது சாத்தியமில்லை என்றாலும், அடுத்தடுத்து தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக தமிழகத்தை ஒரு தூய நல்லாட்சி தரும் அரசாக மாற்ற முடியும் என்று விஜய் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும், அதற்கான முன்னெடுப்புகளைத்தான் இந்த முறை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
2026 இல் ஸ்டாலினுடன் மோதும் விஜய், 2031-ல் உதயநிதியுடன் மோதி, திராவிட கலாச்சாரமே முடிவுக்கு வந்துவிடும் என்றும் விஜய்யின் ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். “பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்ததால் அ.தி.மு.க. தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் என்றும், அந்த கட்சியை தோற்கடிப்பதற்கு வேறொருவர் தேவை இல்லை” என்று கூறும் அரசியல் ஆய்வாளர்கள், “விஜய்க்கு இருக்கும் ஒரே போட்டி தி.மு.க.தான். தி.மு.க.வை மட்டும் வீழ்த்திவிட்டால், மற்ற சின்ன சின்ன கட்சிகள் எல்லாம் தானாகவே காணாமல் போய்விடும்” என்றும் கூறி வருகின்றனர்.
மொத்தத்தில், விஜய் ஒரு நல்லாட்சி தர வேண்டும் என்ற எண்ணத்தில் அரசியலுக்கு வந்துள்ள நிலையில், அவருக்கு மக்கள் ஆதரவு கிடைக்குமா?, தொடர்ச்சியாக அவர் நல்லாட்சி தருவாரா?, மக்களின் நீண்ட நாள் ஏக்கம் முடிவுக்கு வருமா என்பதை எல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
