விஜய் எதை நினைத்து அரசியல் கட்சி தொடங்கினாரோ, அது கொஞ்சம் கொஞ்சமாக நடந்து கொண்டிருக்கிறது என்றும், “ஆல் இஸ் வெல்” என்றும், விரைவில் விஜய், ராகுல் காந்தியை சந்திக்க இருப்பதாகவும், இந்தச் சந்திப்புக்கு பிறகு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் விஜய் தலைமையை ஏற்று கூட்டணிக்கு வரும் என்றும் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் கூறுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை ஆரம்பிக்கும் முன்பே, ராகுல் காந்தியை ரகசியமாக சந்தித்து, தான் அரசியலுக்கு வர இருப்பதை சொன்னதாகவும், அப்போது “நீங்கள் அரசியல் கட்சியை தொடங்குங்கள், நான் உங்களுக்கு கண்டிப்பாக ஆதரவு தருகிறேன்” என்று ராகுல் காந்தி வாக்குறுதி அளித்ததாகவும் கூறப்படுகிறது. ராகுல் காந்தியை விஜய் சந்தித்தார் என்பதை முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணியும் கூட ஒரு பேட்டியில் உறுதி செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ராகுல் காந்தியின் ஒப்புதலோடுதான் விஜய் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளதாகவும், அதனால்தான் அவர் பாஜகவுடன் “ஒட்டும் இல்லை, உறவும் இல்லை” என்று இன்றுவரை அடித்து கூறி வருகிறார் என்றும் கூறப்பட்டுள்ளது. தற்போது அரசியல் கட்சியை தொடங்கி, ஓரளவுக்குப் பட்டி தொட்டி எங்கும் அவரது அரசியல் கட்சி மக்களிடம் போய் சேர்ந்து விட்டதை ராகுல் காந்தி உணர்ந்திருப்பதாகவும், இங்கு உள்ள காங்கிரஸ் பிரமுகர்கள் அவ்வப்போது ராகுல் காந்திக்கு விஜய் குறித்து அப்டேட்டுகளை தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான், மீண்டும் விஜய்யை சந்திக்க ராகுல் காந்தி ஒப்புதல் கொடுத்து இருப்பதாகவும், இம்மாத இறுதியில் அந்த சந்திப்பு நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. விஜய் – ராகுல் காந்தி சந்திப்பு நடந்தவுடன், விஜய் தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் இணையும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒரே ஒரு நிகழ்வு மட்டும் நடந்துவிட்டால், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இடது கம்யூனிஸ்ட், வலது கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் விஜய் கூட்டணிக்கு வந்துவிடும் என்றும், அதுமட்டுமின்றி சின்ன சின்ன கட்சிகளும் இந்த கூட்டணிக்கு வர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒரு பக்கம் அதிமுக – பாஜக, இன்னொரு பக்கம் திமுக – பாமக ஆகிய கட்சிகள் தவிர, மற்ற அனைத்து கட்சிகளுமே விஜய் கூட்டணியில்தான் இருக்கும் என்றும், இது ஒரு மெகா கூட்டணியாக அமையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் கருத்துக்களாக மேற்கண்டவை இருந்தாலும், இது உண்மையில் நடைபெறுமா? விஜய் தமிழகத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்துவாரா? திராவிட ஆட்சிகளுக்கு முடிவுரை எழுதுவாரா? என்பதை எல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
