கையில வாங்கினேன் பையில போடல.. காசு போன இடம் தெரியல.. ரூ.1.6 கோடி சம்பளம்.. ஆனாலும் மிச்சம்பிடிக்க முடியலை.. ஒரு தம்பதியின் புலம்பல்.. அப்படி என்ன தான் செலவு?

கூகிளில் வருடத்திற்கு ₹1.6 கோடி சம்பளம் வாங்கும் ஒரு மென்பொருள் பொறியாளர், குடும்ப செலவுகளுக்கும் மற்ற செலவுகளுக்குமே சம்பளம் முழுவதும் செலவாகி விடுகிறது என்றும், தன்னால் சேமிப்பு என்று மிச்சப்படுத்த முடியவில்லை என்றும் பேட்டி…

newyork

கூகிளில் வருடத்திற்கு ₹1.6 கோடி சம்பளம் வாங்கும் ஒரு மென்பொருள் பொறியாளர், குடும்ப செலவுகளுக்கும் மற்ற செலவுகளுக்குமே சம்பளம் முழுவதும் செலவாகி விடுகிறது என்றும், தன்னால் சேமிப்பு என்று மிச்சப்படுத்த முடியவில்லை என்றும் பேட்டி ஒன்றில் புலம்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூகிளில் மென்பொருள் பொறியாளராக வேலை செய்யும் மைத்திரி மங்கள் என்பவர் இந்தியாவை சேர்ந்தவர். இருப்பினும், அவர் தற்போது நியூயார்க்கில் வசித்து வரும் நிலையில், அவரது சம்பளம் அதிகமாக இருந்தாலும், நியூயார்க்கில் வசிப்பதால் தனது மாத செலவுகள், மற்ற செலவுகள் எல்லாம் சேர்த்து தன்னால் பெரிய அளவில் மிச்சப்படுத்த முடியவில்லை என சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

வாடகை முதல் மளிகைப் பொருட்கள் வரை அனைத்து மாத செலவுகளையும் விரிவாக கூறிய அவர், “இந்தியாவில் மாதம் ஒரு லட்சம் வாங்கினாலே செலவுகளை சரி செய்ய முடியும். ஆனால் நியூயார்க்கில் வருடத்திற்கு ஒரு கோடிக்கும் அதிகமாக சம்பாதித்தும் தன்னால் மிச்சப்படுத்த முடியவில்லை” என்று கூறியுள்ளார்.

மாதத்திற்கு சுமார் ₹4 முதல் ₹5 லட்சம் ரூபாய் வரை செலவு செய்வதாக தெரிவித்துள்ளார். வாடகை மட்டும் ₹2.5 லட்சம் என்றும், மளிகை பொருட்கள் மற்றும் வெளியே சாப்பிடுவது, பொழுதுபோக்கு ஆகியவற்றுக்குக் கிட்டத்தட்ட ₹2 லட்சம் செலவாகிறது என்றும், போக்குவரத்துச் செலவுகள் மாதத்திற்கு ₹15 ஆயிரத்திற்கு மேல் செலவாகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

“நியூயார்க் நகரில் வாழ்க்கை செலவு நமது வருமானத்தை அதிகமாக விழுங்கி விடுகிறது என்றும், ஆடம்பர செலவுகளை குறைத்தாலே இந்த அளவுக்கு செலவாகிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, வரிகள் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட செலவுகளும் இருக்கிறது என்றும் அவர் கூறினார். “டாலர்களில் நாம் வாங்கும் சம்பளத்தை ரூபாயில் பிரித்தால் கோடிக்கணக்கில் தெரியும், ஆனால் நாம் டாலர்களில் தான் செலவு செய்கிறோம் என்பதால் பணம் ஒரு சில நாட்களில் கரைந்து விடுகிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அவரது கூற்று உண்மை என்பதையே பலர் தங்களது கமெண்ட்களில் தெரிவித்து வருகின்றனர். நியூயார்க் நகரத்தில் சாதாரணமான ஒரு வாழ்க்கை வாழ்வதற்கே சராசரியாக மாதச் செலவு ₹5 லட்சம் வரை செலவாகும் என்றும், இதே நான்கு பேர் கொண்ட குடும்பமாக வாழ்வதென்றால் ₹7 முதல் ₹10 லட்சம் ரூபாய் வரை மாதம் செலவாகும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக, நியூயார்க் நகரில் வாடகை தான் மிகப்பெரிய செலவு என்றும், ஒரு படுக்கையறை வீட்டிற்கு ₹2 முதல் ₹4 லட்சம் வரை செலவாகும் என்றும், பெரிய குடும்பங்களுக்கு ₹5 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என்றும் கூறுகின்றனர்.

பால், முட்டை, கோழி போன்ற அடிப்படை மளிகை பொருட்கள் அங்கே விலை அதிகம் என்றும், அதேபோல் மாதாந்திர போக்குவரத்து செலவு மட்டுமே கிட்டத்தட்ட ₹10,000 என்றும், மின்சாரம், இணையம் போன்ற செலவுகளுக்கு மட்டும் ₹25 ஆயிரம் செலவாகும் என்றும், வெளியில் சாப்பிடுவது, ஜிம் உறுப்பினர் கட்டணம், பொழுதுபோக்கு செலவு, திரைப்படம் பார்ப்பது ஆகியவற்றிற்கு ஒரு மிகப்பெரிய தொகை செலவாகும் என்றும் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி, குழந்தைகளின் கல்விக்காக மிக அதிகமாக செலவாகும் என்றும், ஆண்டுக்கு ₹38 லட்சம் வரை கல்விக் கட்டணம் மட்டுமே கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.

“எனவே, இந்தியாவில் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கி வாழ்க்கை நடத்துவதும், நியூயார்க்கில் வருடத்திற்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வாழ்க்கை நடத்துவதும் கிட்டத்தட்ட ஒன்றுதான் என்றும், நியூயார்க் நகரில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குவதால் நாங்கள் மிகப்பெரிய அளவில் மிச்சப்படுத்துவோம் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல, வரும் வருமானத்தை ஒரு பைசா கூட சேமிக்க முடியவில்லை” என்றும் பலர் கமெண்டுகளில் புலம்பி வருகின்றனர்.