ஒருத்தன ஏமாத்தணும்னா, அவன் ஆசைய தூண்டனும்.! Payout வரும் என ஏமாந்தது தான் மிச்சம்.. அதிருப்தியில் எக்ஸ் பயனர்கள்.. Subscriptionsஐ திடீரென குறைத்த எக்ஸ்..

உலகின் முன்னணி சமூக வலைத்தள தளமான எக்ஸ் இந்தியாவில் தனது சந்தா கட்டணங்களை கணிசமாக குறைத்துள்ளது. எக்ஸ் தளத்தில் ஏராளமானோர் சந்தா செலுத்தியதற்கு முக்கிய காரணம், அதிலிருந்து பணம் (Payout) வரும் என்பதுதான். எக்ஸ்…

X payout

உலகின் முன்னணி சமூக வலைத்தள தளமான எக்ஸ் இந்தியாவில் தனது சந்தா கட்டணங்களை கணிசமாக குறைத்துள்ளது.

எக்ஸ் தளத்தில் ஏராளமானோர் சந்தா செலுத்தியதற்கு முக்கிய காரணம், அதிலிருந்து பணம் (Payout) வரும் என்பதுதான். எக்ஸ் தளத்தில் நாம் செய்யும் பதிவுகள் அதிகமானவர்களை சென்றடைந்தால் அதற்கு ஏற்ப பணம் வரும் என்றும், இதன் மூலம் ஒரு பகுதி நேர வருமானம் அல்லது நிரந்தர வருமானம் கிடைக்கும் என்பதற்காகத்தான் லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான எக்ஸ் பயனர்கள் சந்தா செலுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், 90% பேர் ஏமாற்றம் தான் அடைந்துள்ளனர். முதலில் 10 டாலர் வரை ஒரு சில பயனர்களுக்கு Payout வந்துள்ளது. ஆனால் 2வது Payout ஏராளமானவர்களுக்கு வரவில்லை. இதனால் வெறுத்துப்போன பலரும் சந்தாவில் இருந்து வெளியேறி வருகின்றனர். “எக்ஸ் தளம் என்பது ஒரு சமூக வலைத்தளம் தான், அதிலிருந்து பணம் சம்பாதிப்பது என்பது நேர விரயம்” என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில்தான் திடீரென எக்ஸ் தளம் தனது சந்தா கட்டணங்களை இந்தியாவுக்காக குறைத்துள்ளது.

எக்ஸ் இணையதளத்தில் அடிப்படை சந்தா இப்போது மாதத்திற்கு ₹170 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது முன்னதாக ₹243.75 ஆக இருந்தது. அடிப்படை சந்தாதாரர்கள் போஸ்ட் எடிட்டிங், நீண்ட வடிவ போஸ்ட்கள், பின்னணி வீடியோ பிளேபேக் மற்றும் வீடியோ பதிவிறக்கங்கள் போன்ற அம்சங்களை அணுக முடியும். ஆண்டு சந்தா விலையும் குறைக்கப்பட்டுள்ளது. ₹2,590.48 இலிருந்து ₹1,700 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது சுமார் 34% குறைப்பு ஆகும்.

பிரீமியம் மற்றும் பிரீமியம்+ திட்டங்களுக்கும் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளது. பிரீமியம் திட்டத்திற்கு மாத சந்தா கட்டணம் கிட்டத்தட்ட 48% குறைக்கப்பட்டுள்ளது. இது முன்னர் மொபைலில் ₹900 ஆக இருந்த நிலையில், இப்போது ₹470 ஆக குறைந்துள்ளது. இணையதளப் பதிப்பில், அதே திட்டம் இப்போது மாதத்திற்கு ₹650 இலிருந்து ₹427 ஆக குறைந்துள்ளது. இது தோராயமாக 34% குறைப்பு ஆகும்.

பிரீமியம்+ திட்டத்திலும் கணிசமான விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இணையதளத்தில் இதற்கு முன்னர் ₹3,470 ஆக இருந்த நிலையில், இப்போது ₹2,570 ஆக உள்ளது. ஆண்டுச் சந்தாவும் ₹34,340 இலிருந்து ₹26,400 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

பிரீமியம்+ பயனர்கள் விளம்பரமில்லா அனுபவம், நீண்ட வடிவ கட்டுரைகளுக்கான அணுகல் மற்றும் Grok 4 மூலம் இயங்கும் சூப்பர் க்ரோக் (SuperGrok) போன்ற பிரத்யேக அம்சங்களை அனுபவிக்க முடியும். இந்த சேவைகள் அடிப்படை அல்லது நிலையான பிரீமியம் அடுக்குகளில் சேர்க்கப்படவில்லை.

பிரீமியம்+ சந்தாவைத் தேர்ந்தெடுக்கும் மொபைல் பயனர்கள் இப்போது மாதத்திற்கு ₹3,000 செலுத்துவார்கள். இது முந்தைய சுமார் ₹5,100 என்ற கட்டணத்திலிருந்து குறிப்பிடத்தக்க குறைப்பு ஆகும்.

எக்ஸ் (X) தளத்தின் திருத்தப்பட்ட சந்தா விலை விவரங்கள் இதோ:

அடிப்படைத் திட்டம் (Basic Plan): முந்தைய மாதக் கட்டணம் ₹244, தற்போது ₹170. முந்தைய ஆண்டுக்கட்டணம் ₹2,591, தற்போது ₹1,700.

பிரீமியம் திட்டம் (Premium Plan): முந்தைய மாத கட்டணம் ₹650, தற்போது ₹427. முந்தைய ஆண்டுக்கட்டணம் ₹6,800, தற்போது ₹4,272.

பிரீமியம்+ திட்டம் (Premium+ Plan): முந்தைய மாதக் கட்டணம் ₹3,470, தற்போது ₹2,570. முந்தைய ஆண்டுக்கட்டணம் ₹34,340, தற்போது ₹26,400.

சந்தாவை குறைத்தாலும் Payout என்பது வெளிப்படையாகவும், எப்படி கணக்கிடுகிறார்கள் என்பதை பயனர்களுக்கு புரியும் வகையில் சொன்னால் மட்டுமே இனி சந்தா கட்டுவோம் என பெரும்பாலான எக்ஸ் பயனர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்..!

மொத்தத்தில் ‘சதுரங்க வேட்டை’ திரைப்படத்தில் வரும் காட்சியை போல் ‘ஒருத்தன ஏமாத்தணும்னா, அவன் ஆசைய தூண்டனும்’ என்ற திட்டத்தின்படி Payout என்ற ஆசையை தூண்டி கோடிக்கணக்கில் Subscriptionsஐ பெற்ற எக்ஸ்-ஐ நம்பி இனியும் Subscriptions செய்வார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.