பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என இதுவரை சொன்னவர்கள் எல்லாமே பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளார்கள் என்றும், ஜெயலலிதா, கருணாநிதி உள்ளிட்டோர் பாஜகவுடன் கூட்டணி வைத்தவர்கள் தான் என்றும், அதேபோல்தான் எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று கூறியவர் தற்போது கூட்டணி வைத்துள்ளார் என்றும், அதுமாதிரி தான் விஜய்யும் கண்டிப்பாக அதிமுக பாஜக கூட்டணிக்கு செல்வார் என்றும், நக்கீரன் பிரகாஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“விஜய்க்கு பின்னணியாக இருப்பது முழுக்க முழுக்க பாஜகதான்” என்று கூறிய பிரகாஷ், விஜய்யின் அரசியல் குரு என்று சொல்லப்படும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பாஜக ஆதரவாளர். ரங்கசாமியின் தளபதிதான் புஸ்ஸி ஆனந்த், அவரும் பாஜக ஆதரவாளர் தான். இவருடைய அரசியல் குருவும், கூடவே இருப்பவரும் பாஜக ஆதரவாளராக இருக்கும்போது, விஜய் எப்படி பாஜக பின்னணி இல்லாமல் இருக்க முடியும்? என்று நக்கீரன் பிரகாஷ் கேள்வி எழுப்பினார்.
ரஜினியை அரசியலுக்கு கொண்டுவர பாஜக மிகவும் முயற்சி செய்தது. ஆனால், ரஜினி கைவிரித்ததனால் அமித்ஷா கண்டுபிடித்து அடுத்த நபர் தான் விஜய். அதன் பிறகுதான் விஜய் அரசியலுக்கு வருகிறார், கட்சி ஆரம்பிக்கிறார். எனவே விஜய், அமித்ஷாவின் ஆள் தான். “அரசியல்வாதிகள் யாரும் கூட்டணி குறித்து சொல்லும் கருத்துக்களை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும், இன்று கூட்டணி இல்லை என்று சொல்லிவிட்டு நாளை கூட்டணியில் சேர்ந்து அரசியலில் எதுவும் நடக்கலாம் என்றும், அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை என்று சொல்வார்கள்” என்றும் கூறப்பட்டு வருகிறது.
எனவே, விஜய் இன்று திமுகவுடனும், பாஜகவுடனும் கூட்டணி இல்லை என்று சொல்வதை முழுமையாக நம்ப முடியாது என்றும், திமுகவை அவர் எதிர்ப்பதால் திமுகவுடன் கூட்டணி இல்லை என்பதை நம்பலாம், ஆனால் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை நம்ப முடியாது. அநேகமாக ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் அதிமுக – பாஜக கூட்டணியில் விஜய் இருப்பார் என்று பல அரசியல் நிபுணர்கள் கூறியதைத்தான் நக்கீரன் பிரகாஷ் தற்போது கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“இஸ்லாமியர்களின் வாக்குகளை கவர்வதற்காகவே விஜய் உருவாக்கப்பட்டுள்ளார் என்றும், அந்த வாக்குகளை அவர் கவர்ந்துவிட்டு அதன் பின்னர் பாஜகவுக்கு வருவார்” என்றும் நக்கீரன் பிரகாஷ் தெரிவித்தார். “பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று சொன்ன விஜய் இதுவரை பாஜகவின் திட்டங்களை ஒன்றை கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதிலிருந்து அவர் பாஜகவின் ஆள் என்று தெரியவில்லையா?” என நக்கீரன் பிரகாஷ் கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தை பொருத்தவரை பாஜக எதிர்ப்பு வாக்குகள் அதிகமாக இருக்கின்றன. அந்த வாக்குகளை அப்படியே திமுக கூட்டணி அறுவடை செய்து வருகிறது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இரண்டு கம்யூனிஸ்ட்கள், மதிமுக ஆகியவை அனைத்துமே பாஜக எதிர்ப்பு கொள்கை உள்ள கட்சிகள் என்பதால், அந்த கூட்டணிக்கு பாஜக எதிர்ப்பு வாக்குகள் மொத்தமாக கிடைக்கின்றன. அந்த வாக்குகளை பிரிக்க வேண்டும் என்பதற்காகத்தான் விஜய் தற்போது அரசியலுக்கு வந்திருக்கிறார். “பாஜக எதிர்ப்பு வாக்குகள் பெருவாரியாக விஜய்க்கு சென்றுவிட்டால், அந்த வாக்குகள் திமுகவுக்கு பாதி குறைந்துவிடும் என்ற அமித்ஷாவின் கணக்குதான் விஜய் அரசியலுக்கு வந்தது” என்றும் நக்கீரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
ஆனால், தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் இதனை மறுத்து வருகின்றனர். “பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதில் தங்கள் தலைவர் உறுதியுடன் இருப்பார் என்றும், பாஜகவுடன் கண்டிப்பாக கூட்டணி வைக்க மாட்டார் என்றும், இதை நீங்கள் பொறுத்திருந்து பார்க்கலாம்” என்று கூறி வருகின்றனர்.
தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்கள் இருக்கும் நிலையில், அதிமுக – பாஜக கூட்டணியில் விஜய் சேருவாரா அல்லது தனது கொள்கையில் உறுதியாக இருந்து பாஜக இருக்கும் கூட்டணியில் சேராமல் இருப்பாரா? தனித்துப் போட்டியிடுவாரா? பாஜக இல்லாத அதிமுகவுடன் கூட்டணி சேருவாரா அல்லது தனது தலைமையிலான ஒரு மெகா கூட்டணியை ஏற்படுத்துவாரா? போன்ற கேள்விகளுக்கு எல்லாம் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
