தமிழக அரசியல் களம் தற்போது நான்கு முனை போட்டி போல தெரிந்தாலும், தேர்தல் நெருங்க நெருங்க அது மூன்று முனை அல்லது இரண்டு முனை போட்டியாக மாறும் என்றும், இறுதிக்கட்டத்தில் திமுக vs தமிழக வெற்றி கழகம் என்ற நிலை ஏற்படும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது தமிழகத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, விஜய் கூட்டணி மற்றும் சீமான் என நான்கு முனைப் போட்டி இருப்பதாக ஒரு தோற்றம் உள்ளது. இதில், சீமான் அணியை போட்டியில் சேர்க்க வேண்டிய அவசியமே இல்லை. அவருக்கு கடந்த தேர்தலில் 8 சதவீத வாக்குகள் கிடைத்தாலும், ஒரு தொகுதியிலும் டெபாசிட் வாங்கவில்லை. அதுமட்டுமின்றி, சீமான் ஆதரவாளர்கள் பலர் இளைஞர்கள் என்பதும், அவர்கள் விஜய்க்கு மாறிவிடுவார்கள் என்பதும் அரசியல் விமர்சகர்களின் கணிப்பாகும். எனவே, அவரது வாக்குகள் வரும் தேர்தலில் இரண்டு முதல் மூன்று சதவீதம் வரை குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும், சீமான் யாருடனும் கூட்டணி சேர மாட்டேன் என்று கூறியதை அடுத்து, மீண்டும் டெபாசிட் வாங்காத ஒரு கட்சியாகத்தான் மாறப்போகிறார் என்றுதான் கூறப்பட்டு வருகிறது.
எனவே, உண்மையான போட்டி திமுக, அதிமுக மற்றும் தவெக ஆகிய மூன்று அணிகளுக்கு இடையே தான் என்று கூறப்பட்டு வருகிறது. இதில், பாரதிய ஜனதாவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்தது, கோயில் நிலத்தில் கல்லூரி கட்டுவது தவறு என்ற எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரம் ஆகியவை திமுக எதிர்ப்பாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி, அதிமுக-பாஜக கூட்டணியை நம்பி எந்த கட்சியும் கூட்டணிக்கு இதுவரை வரவில்லை என்பதும், இனிமேலும் வருவார்களா என்பது சந்தேகமாக உள்ளது. எனவே, அதிமுக-பாஜக கூட்டணி திமுக கூட்டணியை வீழ்த்தும் அளவுக்கு வலுவில்லை என்றுதான் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தான், விஜய் கள அரசியலில் இறங்க போகிறார். அவர் மட்டும் வெளியே வந்து ரோட் ஷோ, ஊர்வலம், மாநாடு என தொடங்கிவிட்டால், அவருக்கு எந்த அளவுக்கு ஆதரவு இருக்கிறது என்பதை திமுக, அதிமுகவே புரிந்துகொள்ளும். விஜய் களத்தில் இறங்கி அரசியலுக்கு வந்துவிட்டால், அதிமுக மூன்றாவது இடத்திற்கு தானாகவே தள்ளப்பட்டு விடும் என்று அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
எனவே, அடுத்த ஆண்டு ஜனவரிக்கு பிறகு களம் திமுக vs தவெக என மாறும் என்றும், இதில் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது. முதல் முறையாக இரண்டு திராவிட கட்சிகளுக்கும் சவால் விடும் வகையில் சிம்ம சொப்பனமாக விஜய் இருக்கிறார் என்று அரசியல் வல்லுனர்கள் கணித்துள்ள நிலையில், அந்தக் கணிப்பு உண்மையாகுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
