உங்கள் ஜிமெயில் இன்பாக்ஸ் வேண்டாத மின்னஞ்சல்களால் நிரம்பி வழிகிறதா? கவலையே வேண்டாம்! சந்தா மின்னஞ்சல்களின் குவியலை குறைக்க ஒரு புதிய, அருமையான அம்சத்தை ஜிமெயில் கொண்டு வந்துள்ளது. இந்த அம்சம் “சந்தாக்களை நிர்வகிக்கும் அதாவது Manage subscriptions என்ற அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால், உங்களுக்க்அன அத்தனை சந்தாக்களையும் ஒரே இடத்தில் தொகுத்து காட்டும். இதில் உங்களுக்குத் தேவையில்லாத செய்திமடல்கள், சலுகைகள், விளம்பர மின்னஞ்சல்கள் என அனைத்தையும் எளிதாக பார்த்து, ஒரே கிளிக்கில் அவற்றை அன்சப்ஸ்க்ரைப் செய்து கொள்ள முடியும்.
இன்றைய நாட்களில், நம் இன்பாக்ஸ்கள் தினசரி சலுகைகள், நிறுவனங்களின் விளம்பரங்கள் மற்றும் பல்வேறு வலைப்பதிவுகளின் செய்திமடல்களால் அடிக்கடி நிரம்பி விடுவதை நாம் காண்கிறோம். இந்த புதிய வசதி நமக்கு மின்னஞ்சல்கள் மீதான கட்டுப்பாட்டை மேலும் அதிகரிக்கிறது. இந்த வசதி, அதிக மின்னஞ்சல்களை அனுப்பும் நிறுவனங்கள் பற்றிய தகவல்களையும், கடந்த சில வாரங்களில் அவர்கள் அனுப்பிய மின்னஞ்சல்களின் எண்ணிக்கையையும் தெளிவாக காட்டும். கூடவே, ஒரே கிளிக்கில் அன்சப்ஸ்க்ரைப் செய்து கொள்ளும் வசதியும் இருப்பதால், இம்மாதிரியான தொல்லைகளில் இருந்து நிரந்தர தீர்வு கிடைக்கும். இனி ஒவ்வொரு மின்னஞ்சலையும் திறந்து, சின்னதாக கண்ணுக்கே தெரியாத வகையில் உள்ள அன்சப்ஸ்க்ரைப் இணைப்பை தேடி அலைய வேண்டியதில்லை.
இந்த வசதியை பயன்படுத்த, ஜிமெயிலின் மேல் இடது மூலையில் உள்ள மெனுவை க்ளிக் செய்து Manage subscriptions என்பதை தேர்ந்தெடுக்கவும். அதன்பின் நீங்கள் விரும்பாத நிறுவனத்தின் பெயரை தேர்ந்தெடுத்தால், அந்த நிறுவனத்திடமிருந்து வந்த அனைத்து சமீபத்திய மின்னஞ்சல்களையும் பார்க்கலாம். பிறகு, அந்த சந்தாவை தொடர வேண்டுமா அல்லது விலக வேண்டுமா என்று நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.
கூகிளின் அதிகாரப்பூர்வ பதிவின்படி, ஏற்கனவே 99.9% க்கும் அதிகமான ஸ்பேம், ஃபிஷிங் மற்றும் மால்வேர் மின்னஞ்சல்களை வெற்றிகரமாக தடுத்துள்ளதாகவும், சமீபத்தில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மோசடி மின்னஞ்சல்களை 35% குறைக்கும் கருவிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த புதிய அம்சம், பயனர்களுக்கு மின்னஞ்சல்கள் மீது மேலும் அதிக கட்டுப்பாட்டை அளித்து, எதை தக்க வைத்துக் கொள்வது, எதை நீக்குவது என்பதை எளிதாக்குகிறது.
இந்த அம்சம், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாடுகளில் மட்டுமே இது கிடைக்கிறது என்றாலும் விரைவில் அனைத்து நாடுகளுக்கும் கிடைக்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
