2026 ஆம் ஆண்டு தேர்தலில் நடிகர் விஜய் ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை; அவர் எதிர்க்கட்சித் தலைவராக கூட வாய்ப்பில்லை. அவரே கூட ஜெயிப்பாரா என்பது அவர் நிற்கும் தொகுதியை பொறுத்துதான் சொல்ல முடியும். ஆனால், அதே நேரத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை விட அவருக்கு மக்கள் மத்தியில் நற்பெயர் உள்ளது, அந்த நற்பெயர் மட்டுமின்றி நெகட்டிவ் விமர்சனம் சுத்தமாக இல்லை. ஆனால், அது மட்டும் ஒரு வெற்றியை தராது என்று அரசியல் விமர்சகரும், பத்திரிகையாளருமான ரங்கராஜ் பாண்டே பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2026 ஆம் ஆண்டு தேர்தலைப் பொருத்தவரை, காலங்காலமாக தேர்தல் முடிவுகளை கணித்து வந்தவர்கள் கூட இந்தத் தேர்தல் முடிவை கணிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். ஏனென்றால், அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் மட்டும் போட்டியாக இருந்தால் எளிதாக கணித்துவிடலாம். தற்போது விஜய் என்ற புதிய நபர் நுழைந்துள்ளதால், அவர் யாருடைய வாக்குகளைப் பிரிப்பார், எத்தனை சதவீதம் வாக்குகளைப் பிரிப்பார் என்பதை கணிக்க முடியவில்லை என்று கூறி வருகின்றனர்.
அதையேதான் ரங்கராஜ் பாண்டேவும் கூறுகிறார். விஜய்க்கு பத்து சதவீதம் வாக்குகள் வரை இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஆனால், அதே நேரத்தில், தி.மு.க.வின் வாக்குகளும் 2019, 2021, 2024 ஆகிய தேர்தல்களில் குறைந்து கொண்டே வருகிறது. இந்த வாக்குகள் எல்லாம் சீமானுக்கும், பா.ஜ.க.வுக்கும் சென்று கொண்டிருக்கிறது. எனவே, 2026 தேர்தலில் இன்னும் தி.மு.க.வுக்கு வாக்குகள் குறைந்தால், அந்த வாக்குகள் எங்கு செல்லும் என்பது தற்போது கேள்விக்குறியாக உள்ளது. ஏனென்றால், விஜய் என்ற புதிய நபர் தற்போது களத்தில் உள்ளார் என்று அவர் கூறியுள்ளார்.
அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை, எடப்பாடி பழனிசாமி மிகவும் புத்திசாலி, அரசியல் ஞானம் தெரிந்தவர். பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்தால் கண்டிப்பாக அ.தி.மு.க.வுக்கு வர வேண்டிய நான்கு ஓட்டு வராது என்று அவருக்குத் தெரியும். ஆனால், அதே நேரத்தில் அ.தி.மு.க.வுக்கு ஏழு ஓட்டு வரும் என்றும் அவருக்குத் தெரியும். ஏழில் நான்கு போனால் மூன்று ஓட்டு லாபம்தான் என்ற கணக்குதான் எடப்பாடி பழனிசாமி எடுத்து உள்ளார் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
பா.ஜ.க.வை தி.மு.க.வும் மற்ற கட்சிகளும் எதிர்ப்பதற்கு ஒரே காரணம், பா.ஜ.க. ஒரு முறை ஆட்சியை பிடித்து விட்டால் காலம் காலமாக தொடர்ந்து ஆட்சியில் இருப்பார்கள். குஜராத் உட்பட ஒரு சில மாநிலங்களை உதாரணமாக சொல்லலாம். அதனால்தான் தி.மு.க., தமிழக வெற்றிக் கழகம், விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் உட்பட பல கட்சிகள் அந்த பா.ஜ.க.வை எதிர்த்து கொண்டே வருகின்றன. ஆனால், பா.ஜ.க. நிச்சயம் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் ஒரு காலம் வரும் என்றும் அவர் தெரிவித்தார்.
“விஜய்க்கு எத்தனை சதவீதம் வாக்குகள் இருக்கிறது? அவர் அதிமுக கூட்டணியில் சேர்வாரா அல்லது தனித்து போட்டியிடுவாரா? விஜய் தலைமையிலான ஒரு பெரிய கூட்டணி அமையுமா?” என்பதெல்லாம் டிசம்பர் மாதத்திற்கு பிறகுதான் தெரியும். இன்றைய நிலையில் தேர்தல் வைத்தால் கண்டிப்பாக அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது என்றும் ரங்கராஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.
மொத்தத்தில், தற்போது தேர்தல் முடிவை கணிப்பது என்பது சவாலானது என்றும், கூட்டணி இறுதி செய்யப்பட்டவுடன் டிசம்பருக்கு பிறகுதான் ஒரு முழுமையான கருத்துக்கணிப்பை தெரிந்து கொள்ள முடியும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
