காவலாளி அஜித் குமார் மரணத்திற்கு நீதி கேட்டு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கும் நிலையில், அந்த ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றமும் அனுமதி கொடுத்துவிட்டது. எனவே, இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் பெருந்திரளாக வருவார்கள் என எதிர்பார்ப்பதாக விஜய்யின் ஆதரவாளரான ஆனந்த்ஜி என்பவர் சமீபத்தில் யூடியூப் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
மேலும், அந்தப் பேட்டியில், “இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விஜய் வருவாரா என்று எனக்கு தெரியவில்லை. என்னுடைய தனிப்பட்ட கருத்தின்படி, அவர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வர வேண்டாம் என்று நான் எண்ணுகிறேன். ஏனென்றால், ஆர்ப்பாட்டம், போராட்டம் அதையும் தாண்டி கொள்கை அரசியலில் அவர் ஈடுபட்டாலே போதும்” என்று தெரிவித்தார்.
ஆனால், அதே நேரத்தில், அவர் வருவார் என்றுதான் கட்சியின் நெருங்கிய வட்டாரங்கள் கூறி வருகின்றன. ஒருவேளை இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விஜய் வந்தால், தமிழகம் இதுவரை பார்க்காத ஒரு கூட்டத்தைப் பார்க்கும். அதாவது, மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு கூட்டம் போன்ற ஒரு கூட்டத்தைப் பார்க்கலாம் என்று கூறிய ஆனந்த்ஜி “தமிழக போலீஸ் தான் பாவம், கூட்டத்தை கட்டுப்படுத்த அவர்கள் என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை” என்றும் ஆனந்த்ஜி தெரிவித்தார்.
அ.தி.மு.க. கடந்த 50 ஆண்டுகளாக தனித்துவமான கட்சியாக இருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.விடம் சரண்டர் ஆகிவிட்டார். எனவே, மக்கள் அ.தி.மு.க. மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். இந்த நேரத்தில், “பா.ஜ.க.தான் தனது கொள்கை எதிரி, அந்த கட்சியுடன் எந்த விதமான கூட்டமும், கூட்டணியும் இல்லை” என்று விஜய் உறுதியாக கூறியதை அடுத்து அ.தி.மு.க. ஆதரவாளர்கள் விஜய் பக்கம் சாய்ந்து விடுவார்கள் என்றும் ஆனந்த்ஜி தெரிவித்தார். இந்த தேர்தல் மட்டுமல்ல, இனி வரும் தேர்தலும் தமிழக வெற்றி கழகத்திற்கும் தி.மு.க.வுக்கும் இடையிலான தேர்தல் உறுதியாக இருக்கும் என நம்புவதாகவும் ஆனந்த்ஜி தெரிவித்தார்.
ஏற்கனவே விஜய் வீட்டில் இருந்துகொண்டே அரசியல் செய்கிறார், பனையூரை தாண்ட மாட்டேங்கிறார் என்று அவரது எதிர்ப்பாளர்கள் விமர்சனம் செய்து வரும் நிலையில், “அவர் வெளியே வந்தால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என்ற உண்மையை அறியாமல் பேசுகிறார்கள்” என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒரு சினிமா நடிகர் என்பதையும் தாண்டி தற்போது ஒரு அரசியல் தலைவராகவும் விஜய்யை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்றும், எனவே விஜய்யின் ரசிகர்கள், கட்சியின் தொண்டர்களை தாண்டி பொதுமக்களும் விஜய்யின் கூட்டத்திற்கு வருவார்கள் என்றும், குறிப்பாக தானாக சேரும் கூட்டம் அது என்றும் கூறப்பட்டுள்ளது.
அஜித் குமாரின் படுகொலைக்கு நியாயம் கேட்டு நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் இருந்து விஜய் களத்தில் இறங்கும் அரசியலை ஆரம்பித்து விட்டால், அ.தி.மு.க., தி.மு.க. இரண்டு கட்சிகளுமே விஜய்க்கு ஈடுகொடுக்க முடியாத நிலை ஏற்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
