அரசியல் விமர்சகர் சின்னப்பா கணேசன் சமீபத்தில் அளித்த யூடியூப் பேட்டியில், “அண்ணாமலை ஒன்றும் முட்டாள் இல்லை. அவர் ஐ.பி.எஸ். படித்தவர், சிங்கம் போல் போலீஸ் அதிகாரியாக வேலை பார்த்தவர், நேர்மைக்கு சொந்தக்காரர். நாம் 3 அடி யோசித்தால் அவர் 33 அடி யோசிப்பார். அத்தகைய ஒரு திறமையான நல்லவரை பா.ஜ.க. ஒதுக்கி வைத்துவிட்டதும் அந்தக் கட்சிக்கு இறங்கு காலம்” என்று கூறி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் பா.ஜ.க. ஒன்றுமே இல்லாமல் இருந்த நிலையில், அண்ணாமலைதான் களமிறங்கி “இப்படி ஒரு கட்சி இருக்கிறது” என்பதை மக்களுக்கு கொண்டு போய் சேர்த்தார். இரண்டு சதவீதத்திற்கும் குறைவாக இருந்த, நோட்டாவுக்கும் குறைவாக வாக்கு சதவீதத்தை வைத்திருந்த பா.ஜ.க.வை 11 சதவீதத்திற்கும் அதிகமாக கொண்டு சென்றவர் அண்ணாமலைதான்.
அண்ணாமலைக்கு எதிராக பா.ஜ.க.வில் இருந்த மூத்த தலைவர்கள் அனைவருமே ஒன்று சேர்ந்தார்கள். தமிழக பா.ஜ.க. தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை தூக்க வேண்டும் என்று டெல்லியிடம் போய் சொன்னால் எடுபடாது என்று புரிந்து கொண்டவர்கள், “அண்ணாமலையை நீக்கினால் தான் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர வேண்டும்” என்று டெல்லியில் உள்ளவர்களை இங்குள்ள மூத்த தலைவர்கள் ஏமாற்றினார்கள். அதன் பிறகுதான் டெல்லியில் உள்ளவர்கள் அண்ணாமலையை நீக்கிவிட்டு, நயினார் நாகேந்திரனை அந்த பதவிக்குக் கொண்டு வந்தார்கள். அப்போதிலிருந்து பா.ஜ.க.வின் வளர்ச்சி நின்று விட்டது என்று சின்னப்பா கணேசன் தெரிவித்தார்.
அண்ணாமலை தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்தபோது தி.மு.க.வில் உள்ள முதல் தர, இரண்டாம் தர, மூன்றாம் தர, நான்காம் தர பேச்சாளர்கள் உள்பட தினசரி அவரை விமர்சனம் செய்து கொண்டிருப்பார்கள்; அவருக்கு எதிராக கருத்துக்களை கூறுவார்கள். ஆனால், அண்ணாமலை பதவி விலகியவுடன் நயினார் நாகேந்திரன் பற்றி எந்தவித விமர்சனமும் இல்லை. காரணம், நயினார் நாகேந்திரன் செத்த பாம்பு என்று அவர்களுக்கு தெரியும். அண்ணாமலையும் விலகிவிட்டதால், அவரை பற்றியும் இனிமேல் பேச வேண்டாம் என்று தி.மு.க. சொல்லி வைத்து விட்டார்கள். இப்போது தி.மு.க.வுக்கு வெற்றி எளிதாகி விட்டது. தங்களுக்கு எதிராக ஒரு வலிமையான தலைமை இல்லை” என தி.மு.க. சந்தோசமாக இருக்கிறது என்று அவர் தெரிவித்தார். ஆனால், அதே நேரத்தில், அ.தி.மு.க. பா.ஜ.க.வுடன் கூட்டணி சேரும் என்பதை தி.மு.க. எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் கூறினார்.
மதுரையில் நடந்த பா.ஜ.க. கூட்டத்தின் போது அமித்ஷா, அண்ணாமலையின் பெயரை சொன்னபோது, பெரும் கரகோஷம் எழுந்தபோது தான் அமித்ஷாவுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. “அண்ணாமலையை பதவியில் இருந்து நீக்கி தப்பு செய்துவிட்டோமோ” என்று அவர் அப்போதுதான் நினைத்திருப்பார். ஆனால், காலம் கடந்துவிட்டது. அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணி தொடர வேண்டும் என்றால் அண்ணாமலை பதவியில் இருந்தால் அது நடக்காது என்பதை அதன் பிறகு அமித்ஷா உணர்ந்து கொண்டார் என்றும் சின்னப்பா கணேசன் தெரிவித்தார்.
அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி வெற்றிபெற என்ன செய்ய வேண்டும் என்ற குறைந்தபட்ச செயல்திட்டம் கூட எடப்பாடி பழனிசாமியிடம் இல்லை, நயினார் நாகேந்திரனிடமும் இல்லை. அப்புறம் எப்படி இந்த கூட்டணி வெற்றி பெறும் என்றும் சின்னப்பா கணேசன் கேள்வி எழுப்பினார்.
தமிழக மக்களைப் பொருத்தவரை இன்னும் அண்ணாமலைதான் ஹீரோவாக இருக்கிறார். “அரசியல் என்றால் சாக்கடை” என்று ஒதுங்கி இருந்தவர்கள் எல்லாம் அண்ணாமலை வந்த பிறகுதான் அரசியலை கவனிக்க ஆரம்பித்தனர். எனவே, அண்ணாமலையை தவிர்த்துவிட்டு பா.ஜ.க. வெற்றி பெறலாம் என்பதை கனவில் கூட நினைக்கக் கூடாது. அண்ணாமலையை வரும் தேர்தலில் சிறப்பான முறையில் பயன்படுத்த வேண்டும். ஈகோவை ஒதுக்கி தள்ளிவிட்டு, அண்ணாமலைக்கு உரிய மரியாதை கொடுத்து தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர்கள் செயல்பட்டால் மட்டுமே வெற்றி பெற வாய்ப்பு உண்டு என்றும் சின்னப்பா கணேசன் தெரிவித்தார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
