இதற்கு முன்பு தேர்தல் களம் என்றால் மூன்று மாதத்திற்கு முன்னால் தான் சூடு பிடிக்கும் என்றும், பிரச்சாரமே இரண்டு மாதங்களுக்கு முன்னர் தான் தீவிரமாக ஆரம்பிக்கும் என்பதையும் தமிழ்நாடு மக்கள் பார்த்திருக்கிறார்கள்.
ஆனால், இப்போது தேர்தல் இன்னும் 9 மாதம் இருக்கும்போது, இப்போதே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர் என்றால், அதற்கு ஒரே காரணம் விஜய் மீதுள்ள பயம்தான் என்றும், ஸ்டாலினையும் எடப்பாடி பழனிசாமியையும் 9 மாதத்துக்கு முன்பே வீடு வீடாக விஜய் போக வைத்து விட்டார் என்றும், இன்னும் பல மாற்றங்களை தமிழ்நாட்டு மக்கள் பார்ப்பார்கள் என்றும் தவெக தொண்டர்கள் கருத்து தெரிவித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
75 ஆண்டுகால தமிழக அரசியலில் அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் மாறி மாறி ஆட்சிக்கு வந்து கொண்டிருந்தன. மூன்றாவதாக ஒரு அணி இந்த இரண்டு திராவிடக் கட்சிகளையும் பயமுறுத்தியதே இல்லை என்பதுதான் உண்மை. ஆனால், விஜய் திடீரென களத்தில் இறங்கி இரண்டு திராவிட கட்சிகளையும் கலங்க வைத்துள்ளார் என்றுதான் கூறப்பட்டு வருகிறது.
பாரபட்சமே இல்லாமல் அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் என ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளின் வாக்குகளையும் கபளீகரம் செய்கிறார் விஜய் என்றும், அதுமட்டுமின்றி புதிதாக வாக்களிக்க இருக்கும் இளைஞர்கள், 40 வயதுக்குட்பட்ட பெண்கள், சிறுபான்மையினர் வாக்குகளும் பெரும் அளவு விஜய்க்கு செல்லும் என்று கருத்துக்கணிப்புகளில் தகவல்கள் வெளியாகி கொண்டிருப்பது மற்ற அரசியல் கட்சிகளுக்கு வயிற்றை கலக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக வரலாற்றிலேயே 9 மாதத்திற்கு முன்பு ஆளுங்கட்சியை சேர்ந்த முதல்வரும், எதிர்க்கட்சியை சேர்ந்த தலைவரும் பிரச்சாரத்தை தொடங்கியதாக வரலாறு இல்லை என்றும், ஆனால் இருவரையும் வெளியே வர வைத்தது விஜய் தான் என்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் பெருமையுடன் கூறிக்கொண்டு இருக்கின்றனர். இது மட்டுமல்ல, விஜய் களத்தில் இறங்கிவிட்டால் அரசியல் களமே முற்றிலும் மாறுபடும் என்றும், இரண்டு திராவிடக் கட்சிகளையும் ஒரே நேரத்தில் வீட்டுக்கு அனுப்பும் ஒரு சக்தியாக விஜய் உருவாகிவிடுவார் என்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நம்பிக்கை என்பது ஓவர் பில்டப்பா? அல்லது உண்மையா? என்பது அடுத்த ஆண்டு மே மாதத்துக்கு பிறகுதான் தெரிய வரும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
