ஸ்பிக் மீடியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் தேர்தல் வியூக வகுப்பாளரான ஹரி என்பவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், தி.மு.க. கூட்டணிக்கு 125 தொகுதிகள் பாதகமாக இருப்பதாகவும், அதில் 25 தொகுதிகளில் தோல்வி உறுதி என்றும், எனவே தி.மு.க. வரும் தேர்தலில் படுதோல்வி அடையும் என்றும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஹரி தேர்தல் அமைப்பாளர் மட்டுமல்லாமல், ஜோதிட வல்லுநராகவும் இருக்கிறார் என்றும், இதனால் இவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு “அஷ்டமி சனி” என்று கூறி இருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனக்கு பென் நிறுவனத்திடம் இருந்து கிடைத்த தகவலின்படி, தமிழகத்தில் உள்ள 125 தொகுதிகளில் தி.மு.க. ஜெயிப்பது கடினம் என்றும், அதில் 25 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பே இல்லை என்றும் ஹரி தெரிவித்தார். மேலும், அந்த 25 தொகுதிகளில் ஏழு தொகுதிகள் தற்போது அமைச்சராக இருப்பவர்கள் என்றும் அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
100 தொகுதிகளில் வெற்றி மிகவும் கடினமாக இருக்கும் என்றும், அ.தி.மு.க.வுக்குத் தான் இந்த தொகுதிகளில் ஆதரவு அதிகமாக இருக்கிறது என்றும், எனவே உடனடியாக இந்த தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும், அரசின் திட்டங்களை கொண்டு போய் சேர்த்தல், பணம் செலவழித்தல் போன்றவற்றில் ஈடுபட வேண்டும் என்றும் தி.மு.க.வுக்கு பென் நிறுவனம் அறிவுறுத்தி உள்ளதாக ஹரி அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இப்படி ஒரு அறிக்கை பென் நிறுவனம் முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் கொடுத்துள்ளதால்தான் தற்போது அவசர அவசரமாக உடன்பிறப்புகள் களத்தில் தேர்தல் பணிக்காக இறக்கப்பட்டு இருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், கூடுதலான பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் இந்த அறிக்கையின் அடிப்படையில் தான் வெளியானது என்றும் கூறப்படுகிறது.
தேர்தல் நேரத்தில் தி.மு.க. அதிக அளவில் பணத்தை செலவழிக்கும் என்றும், ஆனால் அந்த பணம் மக்களிடம் போய்ச் சேராது என்றும், தி.மு.க. நிர்வாகிகள் 50 சதவீதத்தை தங்களுக்காக ஒதுக்கி கொள்வார்கள் என்றும் கூறிய ஹரி, 2006 ஆம் ஆண்டு மற்றும் 2011 ஆம் ஆண்டு இதுதான் நடந்தது என்றும், அதேபோல் 2026 ஆம் ஆண்டிலும் நடக்க வாய்ப்பு இருப்பதாகவும் அந்த பேட்டியில் தெரிவித்தார்.
மேலும், தி.மு.க. இந்து மக்களை, வாக்குகளை கவர்வதற்காக சில அதிரடி அறிவிப்புகளை வெளியிடும் என்றும், “இந்துக்களின் பாதுகாவலர்கள் நாங்கள் தான், இந்துக்களுக்காகவும், இந்து கோவில்களுக்காகவும் அதிக அளவில் செய்தது தி.மு.க. அரசு தான்” என்று விளம்பரப்படுத்தும் என்றும் ஹரி தெரிவித்தார். மேலும், முதல்வருக்கு அஷ்டமி சனி இருப்பதை அடுத்து, அதன் தாக்கம் இல்லாமல் இருப்பதற்காக பல்வேறு கோவில்களில் பூஜைகள் செய்யப்படுவதாகவும், திருநள்ளாற்றில் கூட முதல்வர் குடும்பத்தினர் சென்று பூஜை செய்ததாகவும் ஹரி தெரிவித்தார்.
மேலும், பென் மீடியா அளித்த அறிக்கையில் பொன்முடி படுதோல்வி அடைவார் என்றும், அன்பில் மகேஷை அவருடைய கட்சிக்காரர்களே தோற்கடிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், சென்னையை பொருத்தவரை ஆறு தொகுதிகள் தி.மு.க.வுக்கு சாதகமாக இல்லை என்றும், அதில் ஒரு தொகுதி அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொகுதி என்றும் ஹரி தெரிவித்துள்ளார்.
125 தொகுதிகள் பாதகமாக இருக்கும் நிலையில், இன்னும் 8 மாதத்தில் இந்த தொகுதிகளை சாதகமாக தி.மு.க. மாற்றுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்த பேட்டிக்கு நெட்டிசன்கள் ‘சோனமுத்து.. போச்சா’ என்பது போன்ற காமெடி கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
