எம்.ஜி.ஆர். மாதிரி, என்.டி.ஆர். மாதிரி, ஜெயலலிதா மாதிரி மக்களுக்கு நல்லது செய்வதற்காக நல்ல எண்ணத்துடன் அரசியலுக்கு வாருங்கள். சிரஞ்சீவி மாதிரி, பவன் கல்யாண் மாதிரி டைம் பாஸுக்காக அரசியலுக்கு வராதீர்கள் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு, நடிகையும் அரசியல்வாதியுமான ரோஜா அட்வைஸ் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருபவர்கள் பெரும்பாலும் டைம் பாஸுக்காக அரசியலுக்கு வருகிறார்கள். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அது அவர்களது உரிமை. ஆனால், அரசியலுக்கு வந்தால் தங்களை முழுமையாக மக்கள் சேவையில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
ஆந்திராவில் என்.டி.ஆர்., தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இவர்கள் மூவருமே திரையுலகில் இருந்து வந்தவர்கள் தான். ஆனால், திரை உலகில் இருந்து விலகி முழுமையாக தங்களை அரசியலில் ஈடுபடுத்திக் கொண்டார்கள் என்றும், மக்களுக்கு உண்மையாக சேவை செய்தார்கள் என்றும் நடிகை ரோஜா தெரிவித்தார். அதனால் தான் இன்றும் என்.டி.ஆர்., எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் மக்கள் மனதில் இருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.
ஆனால், இப்போது வரும் நடிகர்கள் சினிமாவில் நடித்துக் கொண்டே அரசியலிலும் இருக்கிறார்கள். சிரஞ்சீவி ஒரு அரசியல் கட்சி ஆரம்பித்தார். திடீரென அந்த கட்சியை காங்கிரஸோடு இணைத்துவிட்டு தொண்டர்களை அம்போ என விட்டு விட்டு சென்றுவிட்டார். அவர் தனது கட்சி தொண்டர்களை நடுத்தெருவில் நிற்க வைத்துவிட்டார்.
அதேபோல், பவன் கல்யாண் சினிமாவில் நடித்துக் கொண்டே அரசியலிலும் இருக்கிறார். திடீரென தமிழகத்திற்கு வருகிறார், திடீரென கர்நாடகா செல்கிறார். டைம்பாஸ் அரசியலில் ஈடுபட்டு வருகிறார் என்று கூறிய ரோஜா, விஜய்க்கு தான் கூறும் அட்வைஸ் என்னவென்றால், எம்.ஜி.ஆர். மாதிரி, ஜெயலலிதா மாதிரி முழுமையான அரசியலில் ஈடுபடுங்கள். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு வாருங்கள். கண்டிப்பாக உங்களுக்கு மக்கள் ஆதரவு தெரிவிப்பார்கள் என்று நடிகை ரோஜா தெரிவித்தார்.
மேலும், பவன் கல்யாண் தமிழக அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். அதேபோல், ஜெகன்மோகன் கட்சியும் தமிழக அரசியலில் கவனம் செலுத்துமா என்ற கேள்விக்கு பதிலளித்த ரோஜா, கண்டிப்பாக செலுத்தாது என்றும், ஆந்திரா அரசியலில் தான் நாங்கள் முழு கவனம் செலுத்துவோம் என்றும், நாங்கள் பவன் கல்யாண் போல டைம் பாஸுக்காக அரசியல் செய்யவில்லை. மக்களின் நலனுக்காக அரசியல் செய்கிறோம் என்றும் நடிகை ரோஜா பதிலளித்தார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
