அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது பிரச்சாரத்தை தொடங்கிவிட்ட நிலையில், அவரது முதற்கட்டப் பிரச்சாரத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. “அதிமுக – பாஜக கூட்டணி பொருந்தாத கூட்டணி” என்று கூறிக்கொண்டிருந்தவர்கள் கூட எடப்பாடியின் பிரச்சாரத்திற்கு பிறகு அவ்வாறு கூறுவதை நிறுத்திவிட்டனர். “நமக்கு பொது எதிரி திமுகதான், எனவே திமுகவை வீழ்த்த இந்த கூட்டணியை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று தொண்டர்களும் சமாதானமாகிவிட்டார்கள். எனவே, எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரம் அதிமுக – பாஜக தொண்டர்களுக்கு ஒரு “பூஸ்ட்” தான் என்று பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.
ஆனால், அதே நேரத்தில் நடிகர் விஜய் செப்டம்பர் மாதம் களத்தில் இறங்க உள்ளார். அவர் களத்தில் இறங்கினால், அதிமுக – பாஜக கூட்டணிக்கு பெரும் சேதாரம் ஏற்படும் என்றும் மணி தெரிவித்தார். “திமுக எதிர்ப்பு ஓட்டுகள், அதிமுக – பாஜக கூட்டணிக்கும், விஜய் கட்சிக்கும் சிதறும்” என்றுதான் இப்போது நிலை உள்ளது. ஆனால், விஜய் களத்தில் இறங்கி, அதிமுக – பாஜக கூட்டணியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டால், திமுக எதிர்ப்பு ஓட்டுகள் சிதறாமல் அப்படியே விஜய்க்கு வந்து சேர வாய்ப்பு உள்ளது.
அதுமட்டுமின்றி, அதிமுக – பாஜக கூட்டணிக்கு வேறு கட்சிகள் வரவில்லை என்றால், “இந்த கூட்டணியால் திமுகவை எதிர்க்க முடியாது” என்று மக்கள் மனதிலேயே ஒரு எண்ணம் தோன்றிவிடும். அப்படி என்றால், திமுக கூட்டணியை வெல்லக்கூடிய விஜய்க்கு வாக்களிப்போம் என்றுதான் மக்கள் மனம் மாறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், விஜய்க்கு இருக்கும் இன்னொரு சாதகமான அம்சம் என்னவென்றால், அவர் திமுக எதிர்ப்பு ஓட்டை மட்டும் இன்றி, பாஜக எதிர்ப்பு ஓட்டையும் கவர்கிறார். பாஜகவை பிடிக்காதவர்கள் இதுவரை திமுகவுக்கு வேறு வழி இல்லை என்று வாக்களித்து கொண்டிருந்தனர். குறிப்பாக, சிறுபான்மையினர் திமுகவுக்கு வாக்களித்தனர். ஆனால், இப்போது அவர்களுக்கு வேறு ஒரு ஆப்ஷன் இருக்கிறது, “பாஜகவை எதிர்க்கும் இன்னொரு கட்சி விஜய்” என்றும், எனவே இந்த முறை விஜய்க்கு வாக்களிக்கலாம் என்றும் அவர்கள் எண்ணிவிட்டால், கிட்டத்தட்ட 50% சிறுபான்மையினர் ஓட்டுகள் விஜய்க்கு சென்றுவிடும். அதுவும் அவருக்கு ஒரு மிகப்பெரிய பிளஸ் ஆக அமையும். குறிப்பாக, காங்கிரஸ் கட்சி மட்டும் விஜய்யுடன் கூட்டணி சேர்ந்துவிட்டால், தவெக கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி என்றும், இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் ஒட்டுமொத்த ஓட்டும் விஜய்க்கு சென்றுவிடும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
மொத்தத்தில், விஜய்யின் அரசியல் வருகை 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் செய்து வரும் அதிமுக, திமுகவுக்கு ஒரு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது என்றும், முதல் முதலாக திராவிட கட்சிகளை வீழ்த்த ஒரு புதிய கட்சி தோன்றியுள்ளது என்றுதான் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதிமுக, திமுகவுக்கு மாறி மாறி வாக்களித்து வெறுப்பில் இருக்கும் நடுநிலை வாக்காளர்கள் விஜய் பக்கம் சாய வாய்ப்பு இருப்பதாகவும், எனவே 2026 தேர்தல் தமிழக அரசியலில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் தேர்தலாக இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
