இந்தியா முழுவதும் நாளை அதாவது ஜூலை 9 அன்று, புதன்கிழமை, நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெறவுள்ளது. 10 மத்திய தொழிற்சங்கங்கள், விவசாயிகள் மற்றும் கிராமப்புற தொழிலாளர் அமைப்புகளின் கூட்டமைப்பு இதற்கு அழைப்பு விடுத்துள்ளது. “பாரத் பந்த்” போன்று நடைபெறும் இந்த போராட்டம், கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாகவும், தொழிலாளர் உரிமைகளை அச்சுறுத்தும் வகையிலும் மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில் நடைபெறுகிறது.
இந்த வேலைநிறுத்தத்தில், முறைசாரா மற்றும் அமைப்புசாரா துறைகளை சேர்ந்த 25 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் மிகப்பெரிய தொழிற்சங்கங்கள் சில இந்த வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அவை:
இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (INTUC)
அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC)
இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (CITU)
ஹிந்த் மஸ்தூர் சபா (HMS)
சுயதொழில் புரியும் மகளிர் சங்கம் (SEWA)
தொழிலாளர் முன்னேற்றப் பேரவை (LPF)
ஐக்கிய தொழிற்சங்க காங்கிரஸ் (UTUC)
தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் (TUCC)
அகில இந்திய ஐக்கிய தொழிற்சங்க மையம் (AIUTUC)
அகில இந்திய மத்திய தொழிற்சங்க கவுன்சில் (AICCTU)
நிலக்கரி சுரங்கம், போக்குவரத்து, எஃகு மற்றும் அஞ்சல் சேவைகள் போன்ற துறைகளை சேர்ந்த தொழிலாளர்களும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கி தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்கிறதா? என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை எதுவும் இல்லை என்றாலும், பொதுத்துறை மற்றும் கூட்டுறவு வங்கிகளின் ஊழியர்கள் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது. எனவே காசோலை பரிமாற்றங்கள், வங்கி கிளை செயல்பாடுகள் மற்றும் வாடிக்கையாளர் சேவைகளில் இடையூறு ஏற்படுத்தலாம்.
மாநில போக்குவரத்து சேவைகள் மற்றும் டாக்ஸிகள் ஓரளவு பாதிக்கப்படலாம். போராட்ட பேரணிகள் மற்றும் சாலை மறியல் காரணமாக பெரிய நகரங்களில் போக்குவரத்து மெதுவாக இருக்கலாம். தினசரி பயணம் செய்வோர் அதற்கேற்றவாறு திட்டமிட வேண்டும்.
கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் அலுவலகங்கள் திறந்திருக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், போக்குவரத்து இடையூறுகள் காரணமாக தாமத வருகை இருக்கலாம்.
ரயில்வே தொழிற்சங்கங்கள் முறையாக வேலைநிறுத்தத்தில் சேரவில்லை. இருப்பினும், ரயில் நிலையங்கள் அல்லது தண்டவாளங்களுக்கு அருகில் போராட்டங்கள் நடந்தால் ரயில் தாமதமாகும் அல்லது ரத்து செய்ய வாய்ப்பு உள்ளது.
இந்திய தொழிலாளர் மாநாட்டை நடத்துதல், நான்கு புதிய தொழிலாளர் சட்டங்களை திரும்பப் பெறுதல், ஒப்பந்த அடிப்படையிலான வேலைவாய்ப்பை முடிவுக்கு கொண்டுவருதல், தனியார்மயமாக்கலை நிறுத்துதல், பொதுத்துறை வேலைவாய்ப்பு மற்றும் ஊதியங்களை அதிகரித்தல் உள்ளிட்ட நீண்டகாலமாக நிலுவையில் உள்ள தங்கள் கோரிக்கைகளை அரசாங்கம் புறக்கணிப்பதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.
வேலையின்மை மற்றும் பணவீக்கம் அதிகரிப்பது, சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற நலன்புரித் துறைகளில் செலவினங்கள் குறைக்கப்பட்டது ஆகியவற்றுக்கும் அவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.
இந்தியா முழுவதிலும் இருந்து மகத்தான ஆதரவுடன், நாளைய பாரத் பந்த் நடைபெற இருப்பதால் பல துறைகளில் இடையூறு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
