ரஷ்யாவின் பதவி நீக்கம் செய்யப்பட்ட போக்குவரத்து அமைச்சர் ரோமன் ஸ்டாரோவோய்ட், தலைநகர் மாஸ்கோவில் தனது காரில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அரசுப் புலனாய்வாளர்கள் தெரிவித்தனர். அதிபர் விளாடிமிர் புதின் அவரை பதவி நீக்கம் செய்த சில மணிநேரங்களிலேயே இந்த சம்பவம் நிகழ்ந்திருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இன்று ரஷ்ய அதிபர் புதின் பிறப்பித்த ஆணையில், ஸ்டாரோவோய்டின் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதூ. ஆனால் பதவி நீக்கத்திற்கான காரணம் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும், அவர் ஊழல் காரணமாக பதவி நீக்கம் செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் கூறியபோது ரஷ்யாவின் உக்ரைன் எல்லையை வலுப்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை அவர் தவறாக பயன்படுத்தியதாக தெரிவித்தார்.
கடந்த ஆண்டு மே மாதம் போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, ஸ்டாரோவோய்ட் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக குர்ஸ்க் பிராந்தியத்தின் ஆளுநராக பதவி வகித்தார். அவர் போக்குவரத்து அமைச்சரான மூன்று மாதங்களுக்கு பிறகு தான் உக்ரைனியப் படைகள் குர்ஸ்க் எல்லைக்குள் நுழைந்து கடும் தாக்குதலை மேற்கொண்டது.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், ஸ்டாரோவோய்டின் வாரிசான ஆளுநர் அலெக்சி ஸ்மிர்னோவ், பாதுகாப்பு நோக்கங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டார். எல்லை பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்ட நிதி திருடப்பட்டதால், குர்ஸ்க் உக்ரைனிய தாக்குதலுக்கு மேலும் எளிதில் பாதிக்கப்படக்கூடியதாக மாறியது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதன் காரணமாக ஸ்டாரோவோய்ட் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், பதவியிழந்த சில நிமிடங்களில் அவர் தற்கொலை செய்துகொண்டார். அவரது தற்கொலை ரஷ்யாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து நெட்டிசன்கள் பதவியிழந்த சில நிமிடங்களில் தற்கொலை செய்து கொண்டார், அவர் மானஸ்தான்.. நம்மூரில் எல்லாம் இதுபோன்று நடக்க வாய்ப்பே இல்லை என பலர் கருத்து தெரிவித்தனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
