பொங்கல், தீபாவளி, சிவராத்திரி.. என அனைத்து பண்டிகைகளும் அனைத்து மக்களாலும் கொண்டாடப்படும். ஆனா, மாசி மாத அமாவாசையன்று கொண்டாடப்படும் பண்டிகையானது மயான கொள்ளை ஆகும். இது தீய சக்திகளை விரட்டியடிக்கும் காட்டேரி, முனி, பெரியண்ணன், கருப்பண்ணன் மாதிரியான காவல் தெய்வங்களை கொண்டாடி மகிழும் ஒரு விழாவாகும். இது ஏழை எளிய மக்களின் விழான்னு சொன்னால் அது மிகையாகாது.
மக்கள் அறவழி தவறி நடக்க ஆரம்பித்ததைக் கண்டு ஒருமுறை கடுங்கோபம் கொண்ட அம்மன், உலகில் உள்ள உயிர்களை பலி கொள்ளும் ஆக்ரோஷத்தில் இருந்தார். அப்போது, அங்காளபரமேஸ்வரியின் கோபத்தை சாந்தப்படுத்த, சிவன் ருத்ர நடனமாடி, அம்மனை சங்கலியால் கட்டிப்போட்டார். அம்மனின் அடங்காத கோபத்தை கட்டுப்படுத்திய சிவன், ஆண்டுதோறும், மகாசிவராத்திரி விழாவுக்கு அடுத்து வரும் அமாவாசை தினத்தில், அம்மனின் கட்டு அவிழ்க்கப்பட்டு, உயிர் பலி வாங்க அனுமதி அளித்தார். மயான கொள்ளை தினத்தில் தீய சக்திகளை அங்காளம்மன் பலிவாங்குவதாய் மக்களின் நம்பிக்கை.
தவறு செய்பவர்களை பலிவாங்கினால் மட்டும் போதுமா?! பாதிக்கப்பட்டு இருக்கவுங்களை காக்கவேண்டுமே! காப்பதும் கடவுளின் வேலையாச்சே?! அப்படி தீய சக்திகளிடமிருந்து அம்மன் தங்களை காப்பாற்றியதற்கான நேர்த்திக்கடனாய் மயானக்கொள்ளை சூறை விடுதலே இந்த விழாவின் சிறப்பம்சமாகும். வேண்டிக்கொள்ளும் பிரார்த்தனைகள் நிறைவேறினால் பழங்கள், காய்கள், மஞ்சள், கொழுக்கட்டை, கீரை, பிஸ்கட், சாக்லெட், வளையல் எனப் பல பொருள்களைக் கொண்டு வரும் பக்தர்கள், அதை மக்கள் கூட்டத்துக்கு நடுவே வீசி இறைப்பார்கள். அதோடு மட்டுமல்லாமல் மயானத்தில் அங்காளியாய் ஆடிவரும் சாமியாடிகள், சுடுகாட்டு மண்ணால் செய்யப்பட்ட உருவத்தைக் கலைத்து, அதனுள் வைக்கப்பட்டிருக்கும் ஆட்டின் மாமிசம், குடல் போன்றவற்றை வாயால் கடித்து இழுத்து வீசுவார்கள். இதுவே மயானக்கொள்ளை சூறை எனப்படுகிறது. இங்கு கொள்ளை என்றால் பறிப்பது என்று பொருள் இல்லை. காளிதேவி அசுரசக்திகளை விரட்டுவது என்றே பொருள்.
அங்காளியம்மனுக்காக நேர்ந்து கொள்பவர்களும், கரகம் எடுப்பவர்களும் 40 நாள்களுக்கு முன்னரே விரதமிருக்கத் தொடங்குவார்கள். மஞ்சள் ஆடை உடுத்தி, காப்பு கட்டிக்கொள்வார்கள். சிவராத்திரியை அடுத்து வரும் அமாவாசை தினத்தில் சுடுகாட்டுக்கு அருகில் இருக்கும் அங்காளியம்மன் கோயிலிலிருந்து ஆடல், பாடல், இசையோடு ஊர்வலமாகச் சுடுகாட்டை நோக்கி சூறையாடக் கிளம்புவார்கள். அங்காளியம்மனோடு சிவன், கருப்பணசாமி, சுடலை, பத்ரகாளி, காட்டேரி, பேய்ச்சி போன்ற பல உருவங்களைத் தாங்கிய சாமியாடிகளும் உடன் செல்வார்கள். பெரிய பல்லக்கில் அங்காளியம்மன் திருவுருவச்சிலை அலங்கரிக்கப்பட்டு கொண்டுவரப்படும். தெருத்தெருவாக ஊர்ந்து செல்லும் இந்தக் கூட்டத்தை எல்லோரும் ஆச்சர்யமாகவும், சற்று அச்சத்துடனும் பார்த்து வணங்குவார்கள். நள்ளிரவை எட்டும் நேரத்தில் எல்லோரும் சுடுகாட்டுக்குள் சென்று ஆவேசமாக ஆடி, சுடுகாட்டு உருவாரத்தைக் களைத்து அருள்வாக்கு சொல்வார்கள். அங்கு வந்த எல்லோரும் அந்தச் சுடுகாட்டுச் சாம்பலை ஒரு துணியில் கட்டி எடுத்துக்கொள்வார்கள். அந்த மண்ணை வீட்டு வாசலில் கட்டினால், தீய சக்திகள் அண்டாது என்பது அவர்களின் நம்பிக்கை.
மரத்தில் காய் காய்க்காவிட்டாலும், பிள்ளை வரம் இல்லாவிட்டாலும், திருஷ்டி, தீர்க்க முடியாத நோய்கள் தீர்க்கவும், பில்லி சூனியம் மாதிரியான அமானுஷ்ய சக்திகளால் பாதிக்கப்பட்டவங்க குணமாக இப்படி எல்லாத்துக்கும் எளிய மக்கள் வேண்டிக்க ஓடிவருவது மயான கொள்ளை விழாவுக்குத்தான்னு சொன்னால் மிகையாகாது… இப்படிப்பட்ட மயான கொள்ளை விழா 6/3/2019 புதன்கிழமை அன்று வெகு விமர்சையாய் கொண்டாடப்படும். இந்த விழா திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், சென்னை உட்பட்ட வட தமிழகத்தில் மட்டுமே கொண்டாடப்படும் என்பது கூடுதல் தகவல்…