பகவத் கீதை தேர் சொல்லும் வாழ்க்கை தத்துவம்

By Staff

Published:


8db9d19f15356db7ba37476699a5e5aa

மகாபாரதம், குருஷேத்திர போர், பகவத் கீதை என்றாலே நம் நினைவுக்கு வருவது கிருஷ்ணர் தேரை ஓட்ட, அதில் அர்ஜுனன் பின்னிருந்தபடி பயணிக்கும் சித்திரம்தான்.இது வெறும் சித்திரமில்லை. அதேநேரத்தில் கீதா உபதேசம் மட்டுமில்லாம மிகுந்த உட்பொருள் உடையது. இந்த சித்திரத்தில் இருக்கும் ஒவ்வொரு அம்சமும் நம்மில் இருக்கும் ஒவ்வொரு அம்சத்தின் குறியீடு.முதலில் எவை எவற்றை குறிக்கின்றன என்பதை பார்ப்போம்.

போர்- வாழ்க்கை.

போர்க்களம்- இந்த பூவுலகம்.

எதிரணியினர்- நமது செயல்களால் விளையும் எதிர்வினைகள்

பாண்டவர் அணி – நாம் செய்த புண்ணிய பலன்கள்

தேர்- நம் உடல்

அர்ஜுனர்- ஜீவாத்மா,

குதிரைகள்- மனது.

ஸ்ரீகிருஷ்ணர் கையின் கடிவாளம்- விதி.

ஸ்ரீகிருஷ்ணர் கையின் சாட்டை- நம் அறிவு/ புத்திசாலித்தனம்

ஸ்ரீகிருஷ்ணர்- பரமாத்மா, மனசாட்சி, உள்ளுணர்வு

தேர்க்கொடியிலிருக்கும் ஆஞ்சநேயர்- நல்லொழுக்கம் என ஒவ்வொரு குறியீடு அதில் அடங்கியுள்ளது.

50679e18ded813586eb38ddb53fb31ca

நாம் வாழும் இந்த பூமி போர்க்களம். நம் வாழ்க்கை அதில் நடக்கும் போர். எதிரணியில் அணிவகுத்து நிறபவர்கள் நாம் செய்த தீவினைகள். அவை எப்போதும் நமக்கு பிரச்சனை மாற்றி பிரச்சனையாக கொடுத்துக் கொண்டே இருக்கும். பாண்டவர் படை நாம் செய்த புண்ணியங்கள். அவை நமக்கு சாதகமாக நம்மை காப்பாற்ற முயற்சிக்கின்றன. நாம் செய்த தீவினைகள் கொடுக்கும் தொல்லைகளை சமாளிக்க நாம் செய்த புண்ணியங்கள் உதவுகின்றன.குதிரைகள் இழுத்துச் செல்லும் திசையில் எப்படி தேர் செல்கிறதோ அப்படி நம் உடலும் மனம் இழுத்துச் செல்லும் திசையில்தான் செல்கிறது. அதனால் தேர் நம் உடலை குறிக்கிறது. அர்ஜுனர் தேரில் நிற்பதை போன்று ஜீவாத்மா நம் உடலில் உரைகிறது. அர்ஜுனரின் வேலை அம்புகள் எய்வது மட்டும்தான். அதேப்போல நமது வேலையும் நம் கடமையை செய்வது மட்டும்தான்.மனம் குதிரை போன்றது. அது ஒரே சமயத்தில் நான்கு விஷயங்களை சிந்திக்கக்கூடியது. ஒரே சமயத்தில் நான்கு விஷயத்தை சிந்திக்கக் கூடியதாக இருந்தாலும், ஒரு முகப்பட்டு செயல்பட வேண்டும். மனதை அடக்கி நம் விருப்பப்படி நடக்க வைப்பதும் குதிரையை அடக்குவது போன்றதுதான். மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொண்டால் குதிரை முரண்டு பிடிக்கும். மெல்லமெல்ல தட்டி கொடுத்து வழிக்கு கொண்டு வர வேண்டும். மனமும் அப்படித் தான். ஓரேயடியாக அடக்கி வைத்தால் மன அழுத்தம், சோர்வு இவை ஏற்படும். அதனால் அதன் ஆசைகளையும் அவ்வப்போது நிறைவேற்றி அதை உற்சாகப்படுத்த வேண்டும். அப்போது அது கிருஷ்ணர் ஓட்டிச்செல்லும் இந்த குதிரை போல ஆரோக்கியமானதாக இருக்கும்.

கிருஷ்ணர் கையிலிருக்கும் கடிவாளம்தான் விதி. மனம் விதியின் பிடியில் இருக்கிறது. விதி எந்த திசையில் திரும்புகிறதோ மனமும் அந்த திசையில்தான் பயணிக்கும். கடிவாளத்தை பிடித்துக் கொண்டிருக்கும் கிருஷ்ணர் கடவுள். விதியை கடவுள் இயக்குகிறார். இங்கே இது ஒரு விதிவிலக்கு. கடவுள் நம் விதியை இயக்க வேண்டும் என்றால் நாம் இறைவனிடம் சரணடைந்து இருக்க வேண்டும்.கிருஷ்ணர் கையின் சாட்டை நம் புத்தி. புத்தி மனசாட்சியின் பிடியில் இருக்கிறது. புத்தி மனசாட்சியின் பிடியில் இருந்தால் மனம் சரியான திசையில் செல்லும்போது அதை வேகப்படுத்தும். தவறான திசையில் செல்லும்போது இயங்காமல் இருந்து, வேகத்தை குறைத்து விடும்.கிருஷ்ணர் மனசாட்சி, ஆழ்மனம், பேருணர்வு, பரமாத்மா… இவர் உருவம் எடுத்து வந்தால் ஆயிரம் நாமங்கள். உருவமின்றி நமக்குள் இருந்தால் அதற்கும் எத்தனை நாமங்கள். இந்த மனசாட்சியானது இந்த வாழ்க்கையால் பாதிக்கப்படுவது இல்லை. இது ஜீவாத்மாவிற்கு துணையாக இந்த வாழ்க்கையில் பங்கெடுக்கிறது. ஆஞ்சநேயர் நல்லொழுக்கத்தை குறிக்கிறார். நல்லொழுக்கம் நம்மிடம் இருக்கும் வரை தீய சக்திகளால் நமக்கு எந்த பாதிப்பும் வராது.

இத்தகைய வாழ்க்கை குறியீடுகள் அந்த ஒற்றை சித்திரத்தில் இருக்கிறது. காரணக்காரியமின்றி எதுவும் நடக்காது.

Leave a Comment