சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டாய் இருப்பதால் அன்றைய தினம் அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகளும், திருவிழாக்களும் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் தங்கள் வீட்டை சுத்தப்படுத்தி மாவிலை தோரணம் கட்டி, காவி வரைந்து பூஜைஅறையில் விளக்கேற்றி பச்சரிசி பரப்பி அதன்மேல் மனையிட்டு புதுவருட பஞ்சாங்கம் வைத்து வெற்றிலை,பாக்கு, பழம் வைத்து சர்க்கரைப்பொங்கல் நிவேதனம் செய்து வழிபடவேண்டும். பின் அந்தாண்டுக்குண்டான பலன்களை வீட்டின் பெரியவர் படித்து சொல்ல வேண்டும். இதேப்போன்ற நிகழ்வு அந்தந்த ஊர்க்கோவில்களிலும் நடக்கும். அவரவர் தங்களால் இயன்ற தான தர்மங்களை செய்யவேண்டும்.
தமிழ் புத்தாண்டு அன்று தமிழர்கள் தங்கள் வீடுகளில் வேப்பம்பூ, மாங்காய், மிளகா, உப்பு, புளி, வெல்லத்தால் பச்சடியை செய்வர். இதன்மூலம் இன்பம், துன்பம் போன்றவை நிறைந்ததுதான் வாழ்க்கை என உணர்த்தினர். வடை, பாயாசம், சுய்யம், புளி சாதம், எலுமிச்சை சாதமென சித்ரான்னங்கள் சமைத்து சாப்பிட்டு தானமும் செய்யவேண்டும். அருகிலிருக்கும் கோவிலுக்கு சென்று இறைவனை வழிபட்டு அனைவரும் நலமோடு வாழவும், மழை வளம் நிலவளம் பெருகி மக்கள் பசி பட்டினி ஏதுமின்றி வாழ்வாங்கு வாழ இறைவனை பிரார்த்திக்க வேண்டும்.
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்