மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், தனது சொத்துக்களில் ஒரு சதவீதம் மட்டுமே தனது குழந்தைகளுக்கு தருவேன் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அந்த ஒரு சதவீத சொத்துகளே அவரது குழந்தைகளுக்கு ரூ.12,900 கோடி வருமென கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய மைக்ரோசாப்ட் உரிமையாளர் பில் கேட்ஸ்,
“என் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒரு வாரிசு நிறுவனம் அல்ல. என் குழந்தைகள் அற்புதமான கல்வியும் அதிர்ஷ்டமும் பெற்றவர்கள். எனவே அவர்கள் தனிப்பட்ட முறையில் திறமையானவர்களாகவும், சம்பாதிக்கும் திறன் உடையவர்களாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
எனவே என் சொத்துகளை முழுமையாக என் குழந்தைகளுக்கு கொடுக்க எனக்கு விருப்பமில்லை. அவர்களுக்கு ஒரு சதவீத சொத்துகள் மட்டுமே கொடுக்க முடிவு செய்துள்ளேன். ஆனால் அதே நேரத்தில், அவர்கள்மீது நான் அன்பும் ஆதரவும் கொண்டிருக்கிறேன்.
மைக்ரோசாப்ட் நிறுவனம் வாரிசுகளுக்கான நிறுவனம் அல்ல. என் குழந்தைகள் தாங்களாகவே வருமானம் சம்பாதித்து வெற்றி பெறும் வாய்ப்பை அவர்களுக்கு கொடுக்க விரும்புகிறேன். மீதமுள்ள 99% சொத்துக்களை அறக்கட்டளைக்கு கொடுக்க திட்டமிட்டுள்ளேன்,” என கூறினார்.
பில்கேட்ஸ் அவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். மூவருக்கும் ஒரு சதவீத சொத்து என்றாலே ஒவ்வொருவருக்கும் ரூ.12,900 கோடி கிடைக்கும். ஏனெனில் பில் கேட்ஸின் மொத்த சொத்து மதிப்பு ரூ.12.9 லட்சம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அவர் தனது குழந்தைகள் உள்ளிட்ட இளைய தலைமுறைக்கு ஆலோசனையாக,
“உலகம் முழுவதும் பயணம் செய்யுங்கள். வாய்ப்புகள் இல்லாதவர்களை காணலாம். அவர்களது பள்ளிகள் நல்லதாக இல்லாமல் இருக்கலாம். அவர்களுக்கு உடல்நிலை பிரச்சினைகள் இருக்கலாம். ஆனால் அவர்கள் திறமையானவர்கள் என்பதை நீங்கள் கண்டறிய வேண்டும். அவர்களுக்கு உதவி செய்யுங்கள்,” என தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
