இன்ஸ்டாகிராமில் ஒரு பெண்ணின் போலி அக்கவுண்ட் மூலம் சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த சிறுவனின் பெற்றோரிடம் வாட்ஸ்அப் QR கோடு அனுப்பி பணம் கேட்டதால் குற்றவாளிகள் சிக்கி கொண்டனர்.
டெல்லியில் பள்ளியில் படிக்கும் சிறுவன், ஒரு பெண் ஒருவரிடம் இருந்து இன்ஸ்டாகிராமில் நட்பு கோரிக்கையை பெற்றான். அதன் பிறகு, அந்த பெண்ணுடன் அவன் உரையாடி வந்தான். இதன் தொடர்ச்சியாக, டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் சந்திக்கலாம் என்று அந்த பெண் கூறியதாக தெரிகிறது.
இதனை அடுத்து, அந்த சிறுவன் தனது நண்பனுடன் அந்த பெண்ணை பார்க்க கிளம்பிய போது, திடீரென மூன்று பேர் அவனை சுற்றி வளைத்து கடத்திச் சென்றனர். சிறுவனுடன் சென்ற நண்பன் தப்பித்து, நடந்ததை சிறுவனின் பெற்றோரிடம் தெரிவித்தான். பெற்றோர் உடனடியாக காவல்துறையில் புகார் அளித்தனர்.
விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சிறுவனின் வாட்ஸ்அப் கணக்கில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் கேட்டு கடத்தல்காரர்கள் மிரட்டியதை கண்டுபிடித்தனர். மேலும், குற்றவாளிகளுக்கு ஆங்கிலம் பேச தெரியாததால், Google Translate மூலமாகவே சிறுவனின் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள முயன்றுள்ளனர்.
இந்த நிலையில், சிறுவனின் சகோதரன், “பணம் செலுத்த வேண்டும் என்றால் QR கோடு வேண்டும்” என்று வாட்ஸ்அப்பில் கேட்டார். உடனடியாக, கடத்தல்காரர்களும் முட்டாள்தனமாக QR கோடை அனுப்பினர். இந்த QR கோடு ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஒரு அங்கீகரிக்கப்பட்ட வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை கண்டுபிடித்தது.
வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஐபி முகவரிகளை மையமாக வைத்து போலீசார் சிறுவன் கடத்தப்பட்டிருந்த இடத்தை கண்டுபிடித்து, அவனை பாதுகாப்பாக மீட்டனர். விசாரணையில், கடத்தலில் ஈடுபட்ட மூவரில் ஒருவர் வெயிட்டராக வேலை பார்த்தவர், மற்றொருவர் டெலிவரி பாய், மற்றொருவர் வேலை இல்லாதவர் என்று தெரியவந்தது.
மூவரையும் கைது செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பணத்திற்காக சிறுவன் கடத்தப்பட்ட போதும், போலீசாரின் புத்திசாலித்தனத்தால் சிறிய நேரத்திலேயே சிறுவன் மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.