துபாயில் இருந்து பெங்களூருக்கு விமான மூலம் வந்த நடிகை ரன்யா ராவ், 12.5 கிலோ தங்கக் கட்டிகளை கடத்தியதாக கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், நேற்று வரை அவர் தன்னை காவல்துறை அதிகாரிகள் தாக்கியதாக கூறாத நிலையில், இன்று திடீரென, விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டவுடன், 10 முதல் 15 அதிகாரிகள் சேர்ந்து தன்னை அடித்ததாகவும், உடல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், 50 முதல் 60 பக்கங்கள் தட்டச்சு செய்யப்பட்ட ஆவணத்திலும், சுமார் 40 வெற்று பக்கங்களிலும் கையெழுத்திட மிரட்டப்பட்டதாகவும், ஆனால் மிரட்டலுக்கு அஞ்சாமல் கையெழுத்திட மறுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதற்கு முன்பு, காவல்துறையினர் தன்னை அடிக்கவில்லை, ஆனால் கடுமையான வார்த்தைகளால் திட்டியதாக மட்டுமே நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்த ரன்யா ராவ், தற்போது திடீரென, கைது செய்யப்பட்ட சில நிமிடங்களில், 15 அதிகாரிகள் சேர்ந்து தன்னை அடித்ததாக வாக்குமூலம் கொடுத்திருப்பது பெரும் முரணாக பார்க்கப்படுகிறது.
மேலும், தங்கம் கடத்தியதாக கையும் களவுமாக பிடிபட்ட நிலையில், தான் தங்கம் கடத்தவே இல்லை என்றும் கூறியிருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் என்னென்ன அறிவிப்புகள் ரம்யாவிடம் இருந்து வரும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.