ஒரு வருடத்தில் ஆடிமாதம் முதல் மார்கழி முடிய உள்ள காலம் தேவர்களுக்கு இரவு நேரம் என்பதால் ஓய்வுக்குச் சென்றுவிடுவார்கள். அந்த நேரத்தில் நம்முடைய முன்னோர்கள் நம்மைக் காப்பாற்றுவதற்காக பித்ருலோகத்தில் இருந்து வரவேண்டும் என்பதற்காக நாம் அவர்களுக்கு ஆடி அமாவாசையன்று தர்ப்பணம் கொடுக்கிறோம். நம்முடைய தர்ப்பணத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு பித்ருலோகத்திலிருந்து புறப்படும் நம் முன்னோர்கள் புரட்டாசிமாத மகாளய அமாவாசையன்று பூமிக்கு வர்றாங்க. எனவே, புரட்டாசி மாதம் நாம் அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கனும். பிறகு தைமாதம் அவர்கள் மறுபடியும் தங்களுடைய லோகத்துக்குத் திரும்புகிறார்கள். தேவர்களின் ஓய்வுக் காலத்தில் பூமிக்கு வந்து நம்மை ஆசிர்வதித்து காப்பாற்றியதற்காக அவர்களுக்கு நன்றி சொல்லி வழியனுப்பும் விதமாக தை அமாவாசையன்னிக்கு தர்ப்பணம் கொடுக்கனும்ன்னு சொல்லுது சாஸ்திரம்.
இந்நாளில் தீர்த்த தலங்களுக்கு சென்று எள், தண்ணீர் இறைத்து அவர்களின் தாகத்தை தீர்க்கவேண்டும். இவ்வாறு செய்தால் அவர்கள் செய்த பாவங்கள் நீங்கி, அவர்களுக்கு முக்தி பேறு கிட்டுமென்பது ஐதீகம். மேலும் அன்றைய தினம் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம், துணி தானம் செய்யலாம். நம்ம முன்னோர்கள் காகத்தின் வடிவில் நம்ம வீட்டுக்கு வருவதாக ஐதீகம். அதனால் காகத்துக்கு சாப்பாடு வைப்பது முக்கியம். அன்று காலை ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளுக்கு சென்று நீராடி தர்ப்பணம் கொடுக்கனும். காலை 6.30 மணிக்குள் தர்ப்பணம் கொடுக்கனும். ராகுகாலம், எமகண்டம் ஆகியவை தர்ப்பணத்துக்கு பொருந்தாது. மதியவேளை தர்ப்பணம் செய்ய மிகவும் உகந்தது. தர்ப்பணம் கொடுக்கும்போது தங்களின் கோத்திரம், குலதெய்வம், மூன்று தலைமுறையின் பெயர்களை அறிந்து கொள்வது அவசியம். தர்ப்பணம் செய்தபின்னர் வீட்டுக்கு திரும்பி வந்து மறைந்த முன்னோர்களின் படத்தை சுத்தம் செய்து, வடக்கு கிழக்கு திசையில் வைத்து சந்தனம், குங்குமம் இட்டு துளசி மாலை சாத்த வேண்டும். முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்து குத்து விளக்கு ஏற்ற வேண்டும். முன்னோர்களுக்கு பிடித்தமான இனிப்பு, காரம், பழ வகைகளை படைக்க வேண்டும். கோதுமை தவிடு, அகத்திக்கீரை போன்றவற்றை முன்தினமே ஊறவைத்து பசுவிற்கு தானமாக வழங்க வேண்டும். முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை ஒத்திவைப்பது நல்லது. தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய பூஜைகளை செய்யலாம்.
தை அமாவாசையன்று நீத்தார் கடன் செய்ய மறக்காதீங்க!