கேரளாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் கடுமையான உணவு கட்டுப்பாட்டில் இருந்து பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது மாணவி நீண்ட காலமாக உணவு கட்டுப்பாட்டில் இருந்ததாக தெரிகிறது. அவர், தன்னுடைய பெற்றோருக்கே தெரியாமல், வழங்கப்பட்ட உணவை சாப்பிடாமல் கீழே கொட்டிவிட்டு, வெறும் தண்ணீர் மட்டுமே சில நாட்கள் குடித்திருந்ததாக கூறப்படுகிறது.
இதுவொரு உணவு குறைபாடு (Eating Disorder) நோயாக கருதப்படுகிறது. உடல் எடை அதிகரித்து விடுமோ என்ற பயம் காரணமாக, சிலர் உணவு சாப்பிடுவதை வெகுவாக குறைத்துக் கொள்வார்கள். அதன் விளைவாக, உடல் எடை குறைந்து, தேவையான சத்துக்கள் கிடைக்காமல், உடல் பலவீனமடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
இந்த நிலையில், வெறும் தண்ணீரை மட்டுமே சில நாட்கள் குடித்து வாழ்ந்து வந்த அந்த இளம் பெண், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு நல்ல உணவுகளைச் சாப்பிட வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது. ஆனால், அவருடைய ரத்தச் சர்க்கரை மிக மோசமாகக் குறைந்திருந்ததுடன், கடுமையான சுவாச பிரச்சனைகள் உள்ளிட்ட பல கோளாறுகள் இருந்ததால், அவர் வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்றும் உயிரிழந்தார்.
அவர் உயிரிழக்கும் போது, உடல் எடை வெறும் 24 கிலோ மட்டுமே இருந்ததாக கூறப்படுகிறது. உணவு குறைபாடு நோய்களின் ஆபத்து பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம். இதுபோன்ற தீவிரமான டயட் பழக்கங்களை தவிர்த்து, தேவையான உணவுகளை சாப்பிட்டு, ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதே மருத்துவ நிபுணர்கள் கூறும் முக்கியமான அறிவுரையாகும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
