அர்ஜெண்ட் என்றால் 5 ஸ்டார் ஹோட்டல் கழிப்பறையை பொதுமக்கள் பயன்படுத்தலாமா?.. வைரலாகும் வீடியோ..!

  சாலையில் செல்லும் போது திடீரென கழிப்பறை செல்ல வேண்டிய அவசரத் தேவையை உணர்ந்தால், அருகில் எந்தவிதமான பொது கழிப்பறையும் இல்லை என்ற சூழலில், அருகில் ஒரு 5-ஸ்டார் ஹோட்டல் இருந்தால், அங்கு சென்று…

5 star hotel

 

சாலையில் செல்லும் போது திடீரென கழிப்பறை செல்ல வேண்டிய அவசரத் தேவையை உணர்ந்தால், அருகில் எந்தவிதமான பொது கழிப்பறையும் இல்லை என்ற சூழலில், அருகில் ஒரு 5-ஸ்டார் ஹோட்டல் இருந்தால், அங்கு சென்று இலவசமாக கழிப்பறையை பயன்படுத்தலாம். உங்களை யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அப்படி 5-ஸ்டார் ஹோட்டலில் சாதாரண பொதுமக்கள் கழிப்பறையை மட்டும் பயன்படுத்த முடியும் எனக் கூறுவது எவ்வளவு உண்மையெனும் கேள்வி, இந்த வீடியோவை பார்த்தவர்களுக்கு எழுந்திருக்கலாம். இதுகுறித்து வழக்கறிஞர் ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.

பிரிட்டிஷ் காலத்தில் கொண்டு வரப்பட்ட சாரைஸ் என்ற சட்டத்தின்படி, பதிவு செய்யப்பட்ட ஹோட்டல்கள் மற்றும் ரிசார்டுகள் தங்கியிருக்கும் பயணிகளுக்கு மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கும் அடிப்படை வசதிகளை வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து மக்களும் தண்ணீர் அருந்துவதற்கும் கழிப்பறையை பயன்படுத்துவதற்கும் அனுமதிக்கப்பட வேண்டும்.

ஆனால், நவீன ஹோட்டல்கள் இந்த சட்டத்தின் கீழ் வருவதில்லை. மேலும், மாநில அரசு சில விதிகளை அமைத்துள்ளதால், பொதுமக்கள் 5-ஸ்டார் ஹோட்டலில் சென்று கழிப்பறையை பயன்படுத்துவதற்கான உரிமை இல்லை. இந்த உரிமை, சாரைஸ் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஹோட்டல்கள் மற்றும் ரிசார்டுகளுக்கு மட்டுமே பொருந்தும்.

ஆனால் எந்தெந்த ஹோட்டல்கள் இந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதை கண்டறிவது சுலபமல்ல. எனவே, வைரல் வீடியோவை நம்பி, பொதுமக்கள் 5-ஸ்டார் ஹோட்டலுக்குள் சென்று கழிப்பறையை பயன்படுத்த முயன்றால், சட்ட சிக்கல்களில் சிக்குவதை தவிர்க்க முடியாது என்று கூறியுள்ளார்.