மியூச்சுவல் ஃபண்ட் SIP என்பது மாதம் தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்துவதை குறிக்கும். மறதி காரணமாகவோ அல்லது பணம் இல்லாத காரணமாகவோ ஒரு மாதம் SIP தவறவிட்டால், கிரெடிட் ஸ்கோர் பாதிக்குமா என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது. அந்த சந்தேகம் குறித்து தற்போது பார்ப்போம்.
மியூச்சுவல் ஃபண்டின் நோக்கத்தைப் பொருத்தவரை, ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடாக செலுத்தி வருவோம். இந்த தொகை பல வருடங்கள் கழித்து பெரிய அளவில் திரும்ப கிடைக்கும். எனவே, SIP தொகையை ஒவ்வொரு மாதமும் தவறாமல் செலுத்துவது மிகவும் முக்கியமானது.
SIP தொகையை மறந்து விட்டாலும், அல்லது பண பற்றாக்குறை காரணமாக தவணையை கட்டாமல் இருந்தாலும், கிரெடிட் ஸ்கோர் பாதிக்குமா என்றால் இல்லை, பாதிக்காது. ஏனென்றால், SIP என்பது ஒரு கடன் இல்லை. பர்சனல் லோன் உள்ளிட்ட சில கடன்களை வாங்கி, அவற்றின் தவணையை கட்டாமல் இருந்தால் மட்டுமே கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படும்.
SIP தவணையை தவிர்த்துவிட்டதனால், நம் கிரெடிட் ஸ்கோருக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. ஆனால், வங்கியில் போதுமான இருப்பு இல்லாமல், பணம் திரும்பிக் சென்றால், வங்கி நமக்கு அபராதம் விதிக்கும். இது வங்கியைப் பொறுத்து ₹200 முதல் ₹750 வரை இருக்கலாம். இது ஒரு நஷ்டமாக இருக்கும்.
எனவே, SIP தொகையை முடிந்தவரை செலுத்தி விடுவது நல்லது. ஒருவேளை, அவ்வப்போது நம்மால் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டால், SIP-யை தற்காலிகமாக நிறுத்தி வைத்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.