ஒரு படத்திற்கு இயக்குனர் – நடிகர் – இசையமைப்பாளர் அமைந்து நல்ல கதையும் உருவாகி விட்டால் அந்த படம் வேறொரு லெவலுக்கு செல்லும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இப்படி தமிழ் சினிமா கண்ட மூவர் கூட்டணி ஏராளமாக உள்ளது. அதில் முக்கியமான மூவர் தான் இயக்குனர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ், நடிகர் கமல்ஹாசன் மற்றும் இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா ஆகியோர்.
தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி மொழியில் ஏராளமான திரைப்படங்கள் இயக்கியுள்ள சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ், தமிழில் கமல் – இளையராஜாவுடன் சேர்ந்து ராஜபார்வை, மைக்கேல் மதன காமராஜன், அபூர்வ சகோதரர்கள், மும்பை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் இணைந்து பணிபுரிந்துள்ளனர்.
மூவர் கூட்டணி
இந்த மூவர் காம்போவில் உருவான பாடல்கள் அனைத்துமே பட்டித் தொட்டி ஆனதுடன் திரைப்படங்களும் கூட இன்றளவிலும் அதிக பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. அப்படி ஒரு சூழலில், ராஜபார்வை படத்திற்காக முதன் முதலில் கமல், இளையராஜா மற்றும் சிங்கீதம் ஆகிய மூவர் இணைந்த போது ஒரு பாடல் உருவாக்கத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் பற்றி தற்போது பார்க்கலாம்.
இது பற்றி இளையராஜா பேசுகையில், “அந்தி மழை பொழிகிறது பாடலுக்காக முதலில் நான் ஒரு ட்யூன் போட, அது சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவுக்கு பிடிக்கவில்லை. அவர் பதில் கூறாமல் அமைதியாக இருந்தார். அந்த பாட்டை முடித்து கொடுத்து விட்டு எனக்கு மறுநாள் குற்றாலத்தில் வேறொரு படத்திற்கு பாடல் பதிவு செய்ய செல்ல வேண்டும். நான் அங்கே போயும் ராஜபார்வை படத்திற்காக பாடல் அமைத்து கொண்டிருந்தேன்.
ஒரே பாடலுக்காக 63 டியூன்கள்
இதனைத் தொடர்ந்து, அந்தி மழை பொழிகிறது பாடலுக்காக மொத்தம் 63 ட்யூன்களை நான் உருவாக்கினேன். அதனை ராஜ் கமல் நிறுவனத்தில் உட்கார்ந்து சிங்கீதம் முன்னிலையில் மாறி மாறி பாடிக் கொண்டே இருந்தேன். அவர் அடுத்து அடுத்து என கூற, நானும் ஓயாமல் டியூன் மாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் என்னிடம், முதல் முதலாக இந்த பாடலுக்கு போட்ட ட்யூனை வாசியுங்கள் என கூறினார்.
அது தான் அந்தி மழை பொழிகிறது பாடலின் சரியான ராகம். அதை போடவே அவர் இதுவே சிறப்பாக இருக்கிறது எனக்கூறி விட்டார்” என இளையராஜா கூறியுள்ளார். இப்படி ஒரு பாடலுக்காக 63 ட்யூன் அமைத்தும் முதலில் அவர் அமைத்த இசையையே இயக்குனர் ஓகே செய்தது தொடர்பான செய்தி, தற்போது அதிக கவனம் பெற்று வருகிறது.