தமிழ் சினிமாவில் மற்ற எந்த ஒரு கலைஞருக்கும் இல்லாத திறமை உள்ளிட்ட பல விஷயங்கள் இருக்கும் ஒருவர் தான் உலக நாயகன் கமலஹாசன். தான் ஆரம்பத்தில் நடிக்க தொடங்கிய திரைப்படங்களிலேயே நிறைய புதுமைகளை புகுத்தியதுடன் மட்டுமில்லாமல் பாடல்கள் இல்லாமல் ஒரு படத்தை உருவாக்குவது, வெளிநாட்டு திரைப்படங்களில் உபயோகப்படுத்தப்படும் தொழில் நுட்பங்களை தமிழ் சினிமாவில் பயன்படுத்தி பார்ப்பது என எப்போதும் ஏதாவது ஒன்றை புதிதாக செய்து கொண்டே இருப்பார்.
இது போக நடிகனாக நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்துள்ள கமல்ஹாசன் இயக்கிய சில திரைப்படங்களும் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. ஹேராம் திரைப்படம் இன்று வரையிலும் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு படமாக இருக்க அவரது இயக்கத்தில் உருவான மற்றொரு திரைப்படமான விருமாண்டியையும் அவ்வளவு எளிதில் கடந்து விட முடியாது.
நடிக்குறத நிறுத்திடலாம்
விருமாண்டி படத்தின் திரைக்கதையில் ஒரு புதிதான ரூட்டை பயன்படுத்தி இருந்த கமலஹாசன் அதில் நடித்த அனைவருக்குமே முக்கியமான கதாபாத்திரங்களை கொடுத்திருந்தார். அந்த வகையில் கமலுடன் பல திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ள பசுபதியின் கதாபாத்திரமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. அவரது வில்லத்தனம், விருமாண்டி படத்தின் சிறப்பம்சமாக பார்க்கப்பட்டிருந்த நிலையில் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற பின்னரும் பசுபதி திரைப்படங்களிலேயே நடிப்பதை நிறுத்தி விடலாம் என்றும் முடிவு செய்தது ஏன் என்பது பற்றி தற்போது பார்க்கலாம்.
இது பற்றி ஒரு நேர்காணலில் பசுபதி பேசுகையில், “விருமாண்டிக்கு பின்னர் நான் நடித்த படங்களில் அதே வேஷ்டி, சட்டை தான். ஹிட்டான கதாபாத்திரத்திலேயே தொடர்ந்து 5 படங்கள் வரை நடித்ததும் எனக்கு போரடித்து விட்டது. அப்போது கமல் சாரை சந்தித்த சமயத்தில், ‘எப்படி வெள்ளை வேஷ்டி சட்டையில் நிறைய வேரியேஷன்களை கொடுக்க முடியும். எனக்கு என்ன செய்வதென தெரியவில்லை. சினிமாவை விட்டே போய்விடலாம் என நினைக்கிறேன்‘ என்று புலம்பினேன்.
கமல் கொடுத்த வாய்ப்பு
அப்போது தனக்கும் அப்படி நிறைய முறை தோன்றியதாக கூறிய கமல், அதை தாண்டி வர வேண்டும் என்றும் சில அறிவுரைகளை கூறினார். இந்த சம்பவம் நடந்து 20 நாட்கள் கழித்து கமல் சார் நிறுவனத்தில் இருந்து மும்பை எக்ஸ்பிரஸ் திரைப்படத்திற்காக, அதுவும் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரம் செய்ய அழைப்பு வந்தது” என பசுபதி கூறினார்.
அதன் பின்னர் கமலுடன் மட்டுமில்லாமல் தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் கதாபாத்திரங்களில் நிறைய வித்தியாசத்தை காட்டுவதையும் பசுபதி தொடர்ந்து மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.