ஆஸ்திரேலிய மண்ணில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடர் ஆடிவரும் இந்திய கிரிக்கெட் அணி, பாக்சிங் டே டெஸ்டில் ஆடுவதற்காக மிக தீவிரமாக தயாராகி வருகிறது. மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற உள்ள பாக்சிங் டே டெஸ்ட் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா என இரு அணிகளுக்கும் வெற்றி பெற வேண்டுமென்ற கட்டாயமுள்ள போட்டியாகும்.
இதில் வெல்லும் அணிகள் டெஸ்ட் தொடரை சொந்தமாக்குவதற்கான வாய்ப்புகளும் உருவாகும் என்பதை போல உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான வாய்ப்பும் கூட அதிகரிக்கும். இதனால், பிரசித்தி பெற்ற பாக்சிங் டே டெஸ்டில் வெற்றி பெற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா என இரு அணிகளும் முட்டி மோதும் என்றே தெரிகிறது.
பிரசித்தி பெற்ற பாக்சிங் டே டெஸ்ட்
அப்படி ஒரு சூழலில் பாக்சிங் டே டெஸ்டில் இதற்கு முன்பு இந்திய அணி ஆடிய ஐந்து போட்டிகளின் முடிவு என்ன என்பதை தற்போது பார்க்கலாம். கிறிஸ்துமஸ் தினத்திற்கு மறுநாளான டிசம்பர் 26 ஆம் தேதி தான் பாக்சிங் டே டெஸ்ட் ஆரம்பமாகும். ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கிறிஸ்துமஸ் தினத்திற்கு மறுநாள் பொது விடுமுறையாகும்.
இந்த நாளில் தான் அனைத்து ஆண்டிலும் ஆஸ்திரேலிய மண்ணில் உள்ள மெல்போர்ன் மைதானத்தில் பாக்சிங் டே டெஸ்ட் நடைபெறும். இங்கிலாந்து உள்ளிட்ட அணிகளுடனும் இதே நாளில் மோதும் ஆஸ்திரேலிய அணி, இந்த முறை இந்தியாவை எதிர்த்து களமிறங்க உள்ளது. அந்த வகையில், இதற்கு முன்பாக இந்திய அணி கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை பாக்சிங் டே டெஸ்டில் மோதி உள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு பாக்சிங் டே டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து ஆடியிருந்த இந்திய அணி, போட்டியைய் டிரா செய்திருந்தது. இதனைத் தொடர்ந்து, 2018 ஆம் ஆண்டு அதே ஆஸ்திரேலிய அணியை பாக்சிங் டே டெஸ்டில் வீழ்த்திய இந்திய அணி, 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது.
ஹாட்ரிக் வெற்றிக்கு தயாராகும் இந்தியா?..
இதற்கடுத்தபடியாக, 2020 ஆம் ஆண்டில் மீண்டும் ஒருமுறை பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் பாக்சிங் டே டெஸ்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இருந்த இந்திய அணி, 2021 ல் தென்னாபிரிக்க அணிக்கு எதிராகவும் வெற்றி பெற்றது. தொடர்ந்து, கடந்த 2023 ஆம் ஆண்டு நடந்த பாக்சிங் டே டெஸ்டில் அதே தென்னாபிரிக்காவுக்கு எதிராக தோல்வியும் கண்டிருந்தது இந்திய அணி.
இப்படி கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அணி ஆடிய 5 பாக்சிங் டே டெஸ்டில் இரண்டு முறை ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியுள்ள அவர்கள் ஒரே ஒருமுறை மட்டும் தான் தோல்வி அடைந்துள்ளனர். 4 ஆண்டுகள் கழித்து ஆஸ்திரேலியாவை பாக்சிங் டே டெஸ்டில் எதிர்கொள்ளவுள்ள இந்திய அணி, தங்கள் வெற்றி பயணத்தை தொடர வேண்டும் என்பது தான் ரசிகர்களின் விருப்பம்.