டெல்லி: இந்திய பாஸ்போர்ட்டின் தரவரிசை மற்றும் விசா இல்லாத பயணம் போன்ற விவரங்கள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த மத்திய அரசு, விசா இல்லாமல் 26 நாடுகளுக்கு செல்லலாம் என்று கூறியுள்ளது.
இந்திய பாஸ்போர்ட்டின் தரவரிசை மற்றும் விசா இல்லாத பயணம் போன்ற விவரங்களை நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் எம்பி ஒருவர் கேள்வியாக கேட்டிருந்தார். இதற்கு வெளியுறவு விவகாரங்கள் இணை அமைச்சர் கீர்த்தி வர்தன்சிங் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், உலகம் முழுவதும் பாஸ்போர்ட்டுகளுக்கு தரவரிசையை வழங்கும் சில தனியார் நிறுவனங்கள் உள்ளன. அவர்களால் தீர்மானிக்கப்பட்ட அளவுருக்கள் இருந்தாலும், பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தரவரிசை முறை எதுவும் கிடையாது.
மத்திய அரசுக்கு கிடைத்த தகவல்களின்படி, இந்திய பாஸ்போர்ட்டுக்கு 26 நாடுகள் (அங்கோலா, தாய்லாந்து, நேபாளம், பூடான், மலேசியா, மாலத்தீவு, செர்பியா, பிலிப்பைன்ஸ், ருவாண்டா உள்ளிட்டவை) விசா இல்லாத நுழைவை வழங்குகின்றன. 40 நாடுகள் “ஆன்-அரைவல்” வசதியை (கிளம்பிச்செல்லும் தருவாயில் பெற்றுக்கொள்ளலாம்) வழங்குகிறது. அமைச்சகத்தின் இணையதளத்தில் இது கிடைக்கும்.நேபாளம், பூடான் மற்றும் மாலத்தீவுகளின் குடிமக்களுக்கு விதிகளுக்கு உட்பட்டு விசா இல்லாத நுழைவை இந்தியா வழங்குகிறது” இவ்வாறு பதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விசா இல்லாத நாடுகள், ‘ஆன்-அரைவல்’ விசா நாடுகள் பற்றிய வெளியுறவு அமைச்சகத்தின் பட்டியலில் இ-விசாவை பயன்படுத்தி 58 நாடுகளுக்கு பயணிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இவற்றை பயணிகள் அந்தந்த நேரத்தில் சரிபார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டு உள்ளது.