மார்கழி மாதத்தின் சிறப்புப் பாடலான இன்று 4ம் நாளாக மாணிக்கவாசகரின் திருவெம்பாவையில் ‘ஒண்ணித் திலநகையாய்..’ என்று தொடங்கும் பாடல் வருகிறது.
இந்தப் பாடலில் மாணிக்கவாசகர் சொல்லும் இறைவன் ஒரு அற்புத பொருளானவர். விண்ணுக்கு ஒரு மருந்தாக விளங்குபவர். வேத விழுப்பொருளாகத் திகழும் இறைவனை போற்றிப் புகழாமல் இப்படி உறங்கிக் கொண்டு இருக்கிறாயே என்கிறார். இரு தோழிகள் பேசுவது போலவே இந்தப் பாடல் இருக்கும்.
எல்லாரும் வந்துட்டாங்களான்னு சொல்லு என ஒரு தோழி கேட்பாள். அதற்கு எல்லாரும் வந்துட்டாங்களான்னு இதை ஏன் உள்ளே படுத்துக்கிட்டே கேட்டுக்கிட்டு இருக்குற? முதல்ல நீ எழுந்து வான்னு அழைப்பார் இன்னொரு தோழி.
இதுல தூங்கும் தோழி நாம் தான். அதனால் காலையில் எழுந்து இறைவனைத் தொழச் செல்ல வேண்டும் என்பதையே இங்கு மாணிக்கவாசகர் சுட்டிக் காட்டுகிறார். நேரத்தைப் பயனுள்ளதாக செலவு செய்ய வேண்டும். காலம் யாருக்காகவும் காத்திருக்காது.
நேரத்தை வீணாக்கி விட்டு கடைசியில் இந்த வேலையை ஏன் செய்யலன்னு கேள்வி வரும்போது எனக்கு நேரமில்லைன்ன நேரத்து மேல பழியைத் தூக்கிப் போடுகிறோம். தூங்கவேண்டிய நேரத்தில் தூங்க வேண்டும். எழுந்து இறைவனைத் தொழ வேண்டிய நேரத்தில் தொழ வேண்டும்.
எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யாமல் திட்டமிடாமல் இருந்தால் இறைவனின் அருள் எப்படி கிடைக்கும்? என்று கேட்கிறார் மாணிக்கவாசகர். அதே போல ஆண்டாள் நாச்சியார் திருப்பாவையின் 4ம் பாடலில் ‘ஆழி மழைக் கண்ணா..’ என்று தொடங்குகிறார்.
இந்தப் பாடலில் மழைக் கடவுளிடமே சொல்கிறார். அந்த சங்கு போல இடியும், சக்கரம் போல மின்னலும் இருக்கிறது. சாரங்கம் என்ற வில்லையும் தாங்கி இருக்கின்றார். வில்லில் இருந்து பாணம் புறப்பட்டால் சரமழை எப்படி பொழியுமோ அதுபோல மழை பொழிய வேண்டும்.
இப்படி மழை பெய்தால் ஏரி, குளம், கண்மாய்னு எல்லாம் நிறைஞ்சி போயிடும். அதுபோல அந்த அருள் மழையில் நாங்கள் நீராட வேண்டும். அதற்குத்தான் உன்னை அழைக்கிறேன் என்கிறார் தோழி.
குழந்தைகளின் முதல் பிறந்தநாளை எப்படிக் கொண்டாடுவது என்று தெரியுமா? முதல் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடணும்னு பல லட்சம் செலவு பண்ணுபவர்களும் உண்டு. சிலர் எளிமையாகக் கொண்டாடுவர். வசதியானவர்கள் அப்படி செய்தால் அதுல பாதியாவது நாம் செய்யணும்னு கடன் வாங்கி சிலர் செய்வர்.
முதல் பிறந்தநாள் விசேஷமானது. குழந்தை பெயரால் அர்ச்சனை பண்ணலாம். நண்பர்கள், உற்றார், உறவினர்களை அழைத்து அவர்களுக்கு உணவு வழங்கலாம். கேக், டெக்கரேஷன்னு தேவையில்லாத ஆடம்பர செலவுகள் செய்வதைத் தவிர்க்கலாம். பக்கத்தில் எங்காவது குழந்தைகள் காப்பகம், முதியோர் இல்லம், அனாதை இல்லத்துக்கு ஒரு வேளை உணவுக்கு பணம் கொடுக்கலாம்.
அவர்களின் உள்ளன்போடு கூடிய ஆசிர்வாதம் குழந்தைக்குப் பணம் சேர்க்கும். குழந்தை பெயரிலேயே மீதி உள்ள பணத்தை டெபாசிட் பண்ணி வைக்கலாம். குழந்தைக்கு நீண்ட ஆயுள் கிடைக்கணும்னு நாலு பேர் உள்ளன்போடு ஆசிர்வாதம் பண்ணினால் அதுவே குழந்தையை வளர்க்கும்.
இதுபோன்று குழந்தைகளின் பிறந்தநாளைக் கொண்டாடினால் உண்மையான அன்பும் ஆசிர்வாதமும் நிச்சயமாக அந்தக் குழந்தைக்குக் கிடைக்கும். மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.