மழையில் மூழ்கிய நெற்பயிர்களை காப்பாற்றும் வழிமுறைகள் என்னென்ன: திருநெல்வேலி வேளாண் அதிகாரி விளக்கம்

திருநெல்வேலி: மழையில் மூழ்கிய நெற்பயிர்களை காப்பாற்றும் வழிமுறைகள் குறித்து வேளாண் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக நெல்லை வேளாண் இணை இயக்குனர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் நடப்பு பிசான பருவத்தில்…

What are the methods to save paddy crops submerged in rain: Tirunelveli Agriculture Officer explains

திருநெல்வேலி: மழையில் மூழ்கிய நெற்பயிர்களை காப்பாற்றும் வழிமுறைகள் குறித்து வேளாண் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக நெல்லை வேளாண் இணை இயக்குனர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் நடப்பு பிசான பருவத்தில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு தற்போது வளர்ச்சி பருவத்தில் உள்ளது. பருவமழை காரணமாக பயிர்கள் பாதிப்படைந்து மஞ்சள் நிறமாக மாறி இருக்கும். எனவே வயலில் இருக்கும் அதிகப்படியான நீரினை உடனடியாக வெளியேற்ற வேண்டும். அதன்பின்னர் நெற்பயிரை காப்பாற்ற முக்கிய தொழில் நுட்பங்களை விவசாயிகள் கடைபிடிக்க வேண்டும்.

அதன்படி, இளம் பயிர்களுக்கு ஒரு கிலோ ஜிங்க் சல்பேட், 2 கிலோ யூரியா உரத்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் இலை வழியாக தெளிக்க வேண்டும். பயிர் வளர்ச்சி குன்றி காணப்பட்டால் ஏக்கருக்கு 22 கிலோ யூரியா, 18 கிலோ ஜிப்சம், 4 கிலோ வேப்பம் பிண்ணாக்கு கலந்து ஒருநாள் இரவு வைத்து அதனுடன் 17 கிலோ பொட்டாஷ் கலந்து இட வேண்டும். தண்டு உருளும் பருவம் மற்றும் பூக்கும் பருவத்தில் உள்ள பயிர்களுக்கு 1.4 கிலோ டி.ஏ.பி. உரத்தினை 10 லிட்டர் தண்ணீரில் முதல்நாள் ஊறவைத்து மறுநாள் வடிகட்டி கரைசலுடன் 2 கிலோ யூரியா மற்றும் ஒரு கிலோ பொட்டாஷ் உரத்தினை 190 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். இது மகசூல் இழப்பிலிருந்து பயிரை காப்பாற்றும்.

பூச்சி, நோய் மேலாண்மையின்போது விவசாயிகள் தேவைக்கு அதிகமாக யூரியா போன்ற தழைசத்து உரங்கள் இடுவதை தவிர்த்து பிரித்து பிரித்து அதாவது ஒரு தெளிப்பிற்கு ஏக்கர் ஒன்றுக்கு 26 கிலோவிற்கு மேல் யூரியா உரத்தினை இடுவதை தவிர்க்க வேண்டும். இயற்கையாகவே நன்மை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கையினை அதிகரித்திட வரப்பில் உளுந்து தட்டைப்பயிறு போன்ற பயிறு வகை பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும். ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்க வேண்டும். புகைப்பான் தாக்குதலை கட்டுப்படுத்திட ஏக்கருக்கு புப்ரோபெசின் 25 எஸ்.சி. என்ற மருந்து 300 மி.லி. அளவும், இலை சுருட்டு புழு மற்றும் தண்டு துளைப்பான் தாக்குதலை கட்டுப்படுத்திட குளோரான்டிரானிலிபுரோல் 60 மி.லி. அல்லது புளுபென்டையமைடு 40 மி.லி. மருந்தினை தெளிக்க வேண்டும்.

பாக்டீரியா இலைகருகல் நோயினை பரப்பும் பாக்டீரியாவானது பாசன நீர் மூலமாகவும் பாதிக்கப்பட்ட பயிரின் மேல் மழைநீர் பட்டு வழிந்தோடுவதாலும் பெருங்காற்று வீசும்போது பயிர்கள் ஒன்றோடுஒன்று உரசுவதாலும் உண்டாகும் காயத்தாலும் பரவுகிறது. காற்றுடன் தொடர்ந்து பெய்யும் மழைதூறல் மந்தமான தட்பவெட்ப நிலை அதாவது 25 முதல் 30 டிகிரி செல்சியஸ் நிலவுதல் காற்றினில் ஈரப்பதம் 90 சதவீதத்திற்கும் அதிகமாக இருத்தல் ஆகியன இந்நோய் பரவுவதற்கு உகந்த சூழல் ஆகும். நிழலான பகுதிகள் நெருக்கமாக பயிரிடப்பட்டு தழைச்சத்து அதிகமாகவும், சாம்பல்சத்து குறைவாகவும் இடப்பட்ட வயல்கள் போன்றவற்றிலும் இதன் தாக்குதல் அதிகம் காணப்படும். இவ்வாறு காணப்பட்டால் காப்பர் ஆக்ஸி குளோரைடு 500 கிராம் மற்றும் ஸ்டெப்டோமைசின் சல்பேட் டெட்ரா சைக்ளின் கலவை 120 கிராம் ஆகிய மருந்து கலவையினை 200 லிட்டர் தண்ணீர் கலந்து மாலை வேளையில் தெளித்து கட்டுப்படுத்தலாம்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.