வாஷிங்டன்: அமெரிக்க பொருட்களுக்கு இநதியா அதிக வரி விதித்தால் நாங்களும் அதை செய்வோம் என அதிபராக உள்ள டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியா மற்றும் அமெரிக்கா சிறந்த வர்த்தக கூட்டாளிகளாக இருந்து வரும் நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளாக இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவு பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி வகித்த 2020 வரை காலத்தில் இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தகத்தில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. அமெரிக்காவின் சில பொருட்களுக்கு இந்தியா அதிகளவில் வரி விதிப்பதாக டிரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது தான் இதற்கு காரணம். அத்துடன் அதற்கு பதிலடியாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு அதிக வரியை விதித்தார். இது இருநாடுகள் இடையேயான வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இந்தியா மட்டுமின்றி சீனா உள்படபல நாடுகள் பாதிக்கப்பட்டன.
பின்னர் 2020 ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் தோல்வியடைந்து, ஜோ பைடன் ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியா-அமெரிக்கா வர்த்தக உறவு மீண்டும் சீரானது. ஆனால் அமெரிக்காவில் கடந்த மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் அமோக வெற்றிப் பெற்றார். அவர் அடுத்த மாதம் (ஜனவரி) அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்க உள்ளார். இந்த நிலையில் தங்களின் பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதித்தால் அவர்களுக்கு நாங்களும் அதையே செய்வோம் என டிரம்ப் எச்சரித்துள்ளார். புளோரிடா மாகாணத்தில் உள்ள தனது கடற்கரை வீட்டில் பத்திரிகையாளர்களை சந்தித்த டிரம்ப் பேசுகையில்,
அமெரிக்காவின் சில பொருட்களுக்கு அதிக அளவு வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும், பிரேசிலும் முதலிடத்தில் உள்ளன. எனவே இங்கு ‘பரஸ்பரம்’ என்ற வார்த்தை முக்கியமானதாக உள்ளது. அதாவது, அவர்கள் (இந்தியா, பிரேசில்) எங்களுக்கு அதிக வரி விதித்தால் நாங்களும் அதே அளவு வரி விதிப்போம்.
இந்தியா எங்களுக்கு ஒரு சைக்கிளை ஏற்றுமதி செய்கிறது என்றால், அதேபோல அவர்களுக்கும் நாங்கள் ஒரு சைக்கிளை ஏற்றுமதி செய்கிறோம். அப்படியெனில் வரிவிதிப்பு விகிதமும் ஒன்றாகதானே இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் 100 முதல் 200 சதவீதம் வரை வரி விதிக்கிறார்கள். இந்தியாவும், பிரேசிலும் எங்களிடம் அதிக வரியை வசூலிக்கின்றன. பரவாயில்லை இருக்கட்டும். ஏனெனில் நாங்களும் அவர்களிடம் அதே கட்டணத்தை வசூலிக்கப் போகிறோம் என்று டிரம்ப் கூறினார்.