நீ ஒரு சுயம்பு. காட்டுக்குள் ஓரிச்சையாய் விரவிக் கிடக்கும் மூங்கில்.. பாலா குறித்து பாரதிராஜா பெருமிதம்..

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள வணங்கான் திரைப்படம் பொங்கலன்று வெளியாகிறது. கிட்டத்தட்ட 5 வருடங்களுக்குப் பிறகு இப்படம் வெளியாவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இயக்குநர் பாலா திரையுலகில் சேது படம்…

Director Bala

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள வணங்கான் திரைப்படம் பொங்கலன்று வெளியாகிறது. கிட்டத்தட்ட 5 வருடங்களுக்குப் பிறகு இப்படம் வெளியாவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இயக்குநர் பாலா திரையுலகில் சேது படம் மூலமாக அறிமுகமாகி 25 ஆண்டுகளைக் கடந்ததை கொண்டாடும் வகையிலும், வணங்கான் இசை வெளியீட்டு விழாவும் சென்னையில் நேற்று நடைபெற்றது.

இவ்விழாவில் தமிழ் சினிமாவின் முக்கியத் திரைப்பலங்கள் பலர் பங்கேற்றனர். மேலும் இயக்குநர் பாரதிராஜாவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவரால் பங்கு கொள்ள இயலவில்லை. இந்நிலையில் இயக்குநர் இமயம் பாரதிராஜா பாலாவுக்கு வாழ்த்துமடலைப் பதிவிட்டுள்ளார்.

அதில் பாரதிராஜா கூறியிருப்பதாவது,
என் இனிய பாலாவிற்கு,
உன் அன்பிற்குரிய பாரதிராஜா எழுதிக்கொள்வது…
வணக்கம்.
“நான் மிக முக்கியமாக கலந்துகொள்ள வேண்டுமென்று எண்ணுகிற நிகழ்வு பாலா உனது இருபத்தைந்தாம் ஆண்டு கலைப்பயணக் கொண்டாட்ட விழாவும்… அன்பு அருண்விஜய் நடிப்பில் என் அன்பிற்குரிய சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கும் வணங்கான் படத்தின் ஆடியோ விழாவும் ஒருங்கே நிகழும் நிகழ்வு.

நீ ஒரு சுயம்பு. காட்டுக்குள் ஓரிச்சையாய் விரவிக் கிடக்கும் மூங்கில். காற்றுக்கு வளைந்து ஆற்றுக்கு அசைந்து வறட்சிக்கு மிஞ்சி ஒலியிசைத்து ஊருவிப் பரவும் உன்னியல்பு பசுமை வியத்தலில் ஆழ்த்தும். உன் படங்கள் பார்க்கையில் எனக்கு ஏதோ வேறு உலகவாசியானதாகத் தோன்றும். நிறைய அதிர்ந்திருக்கிறேன். நிறைய கசிந்திருக்கிறேன்.

உலகத்தை மாற்றுக் கோணத்தில் பார்க்கும் பார்வை எல்லோருக்கும் வாய்க்காது. நாம் பார்க்கும் பார்வையிலிருந்து, நாம் எண்ணும் எண்ணத்திலிருந்து… விலகி, எண்ணத் துணியாத ஒரு புதிய கோணத்தில் உனது படைப்பு இருக்கும். அதனாலேயே படைப்பை உருவாக்குபவர்கள் நடுவே ஒரு சிறந்த சிற்பியாக உன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடிந்தது.

இந்த இருபத்தைந்து ஆண்டில் அறுபது படங்கள் கூட பண்ணியிருக்கலாம் நீ. அப்படி வடித்துப் போட்டுக் கொண்டே இருப்பது இயந்திர செயல். ஆனால் சிற்பி செதுக்க நாட்களாகும். ஆண்டுகளாகும். சிறிது அழுத்தி உளி பட்டால் சிலை சிதைந்துவிடும். அழகிய சிலைகள் செய்த சிற்பி நீ. அதனால் இக்குறைந்த எண்ணிக்கையிலான படங்களைச் செய்ய பாலாவிற்கு ஆண்டுகள் பலவாயிற்று.

எண்ணங்கள் கதையாக. படமாக மாறுதல் வாய்க்காத வரம். அந்த வரம் வாய்க்கப்பட்ட மிகச் சிலரில் ஒருவனாக நீ இருப்பதில் எனக்கு மிக மிக மகிழ்ச்சி.. இருபத்தைந்து ஆண்டுகள் அல்ல. இன்னும் பல இருபத்தைந்து ஆண்டுகளைக் கடந்து நீ படங்கள் பண்ணிக்கொண்டே இருக்க வேண்டும். அதற்கு எனது அன்பான வாழ்த்துகள். அதற்கான மனபலத்தையும், உடல் பலத்தையும் இறைவன் உனக்குத் தரவேண்டும். இன்னும் தமிழ் சினிமாவை உயரத்திற்கு கொண்டு செல்ல உழைக்கத் தயார்ப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

நிறைய அழகிய உளவியல் படங்களை இந்த உலகமும் நானும் பார்க்க ஆவலாக இருக்கிறோம். படைத்துக் கொண்டேயிரு அழகிய படைப்பாளியே… இந்த வணங்கான் படத்தில் தங்கள் உழைப்பை போட்டிருக்கும் அருண் விஜய், மிஷ்கின், சமுத்திரக் கனி, ஜி.வி பிரகாஷ், சாம் சி எஸ் மற்றும் அனைத்து மிகப் பெரிய நடிகர் நடிகைகள் டெக்னீஷியன்ஸ் அனைவருக்கும்… வெற்றிப்படமாக இப்படம் அமைய வாழ்த்துகிறேன்.

அன்புச் சகோதரன் சுரேஷ் காமாட்சிக்கு அடுத்து ஒரு பெரும் வெற்றியாக இப்படம் அமைய என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உன் முகம் பார்த்து வாழ்த்த வர வேண்டுமென முயற்சித்தேன். நான் வெளிநாட்டில் இருப்பதால் இவ்விழாவில் கலந்துகொள்ள வர இயலவில்லை பாலா.
ஆனாலும் என் வாழ்த்தும் அன்பும் அங்கேயே இருக்கும். மனம் நிறைந்த ஒரு விழாவாக இவ்விழா அமையட்டும்.

பாசத்துடன்
உன் பாரதிராஜா.

இவ்வாறு பாரதிராஜா நெகிழ்ச்சியுடன் பாலாவினை வாழ்த்தியிருக்கிறார்.