பங்குச் சந்தை முதலீட்டின் இயல்பு குறித்து பார்க்கும்போது, அதன் அடிப்படை சித்தாந்தமே ஏற்றம் மற்றும் இறக்கம் தான். பங்கு சந்தையின் மாறிவரும் நிலைகளில் இறக்கம் என்பது, ஒரு நல்ல முதலீட்டு வாய்ப்பாகவும், அதிக ஏற்றம் என்பது விற்பனை செய்து லாபம் ஈட்டும் ஒரு வாய்ப்பாகவும் உள்ளது. முதலீட்டாளர்கள் இந்த உண்மையை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், பங்குச் சந்தை மற்றும் பங்கு சார்ந்த முதலீட்டுத் திட்டங்களில், குறைந்த பட்சம் ஐந்து வருட முன்னோக்கி நோக்கி முதலீடு செய்ய வேண்டும். இன்று முதலீடு செய்து நாளையோ, அடுத்த வாரமோ லாபம் வேண்டும் என்று நினைப்பவர்கள் பங்குச்சந்தைக்கு வர வேண்டாம்.
அதேபோல் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் போது, இழப்பை தாங்கிக் கொள்வதற்கு மனநிலை இல்லாதவர்கள் பங்குச்சந்தைக்கு வர வேண்டாம். பங்கு முதலீடு என்பது ஒரு நீண்ட கால பயணம் என்பதை முதலீட்டாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும். சரியான நிறுவனங்களை தேர்ந்தெடுத்து, பொறுமையாக காத்திருக்க வேண்டும்.
மேலும் முதலீட்டாளர்கள், பங்குச் சந்தையில் ஒரு குறிப்பிட்ட துறையின் பங்குகளை மட்டும் தேர்வு செய்யாமல், முதலீட்டை பரவலாக்குவதன் மூலம் ரிஸ்க் குறைக்க முடியும்.
பங்குகளில் நேரடியாக முதலீடு செய்ய ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள், பங்குச்சந்தை குறியீடு அடிப்படையிலான இன்டெக்ஸ் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய முடியும்.
அதாவது, சென்செக்ஸ் இன்டெக்ஸ் ஃபண்ட், நிஃப்டி இன்டெக்ஸ் ஃபண்டுகள் போன்றவற்றில் முதலீட்டை அதிகரித்து கொள்ள முடியும். சிறிது ரிஸ்க் எடுக்க கூடியவர்கள், பல்வேறு சந்தை மதிப்புள்ள நிறுவன பங்குகளில் முதலீடு செய்யும் மல்டிகேப் ஃபண்ட் மற்றும் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட்களில் நீண்ட கால முதலீடு செய்யலாம்.