2025-ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுப் பட்டியலில் இருந்து லாபதா லேடீஸ் திரைப்படம் நூலிழையில் வெளியேறியது. உலக அளவில் திரையுலகின் மிக உயரிய விருதான 97-வது ஆஸ்கர் விருதுகளுக்கான திரைப்படங்கள் தேர்வுப் பட்டியலில் இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற லாபதா லேடீஸ் திரைப்படம் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் என்ற பிரிவில் பங்கேற்றது.
அமீர்கான், ஜியோ சினிமா மற்றும் இயக்குநர் ராவ் ஆகியோர் இணைந்து தயாரித்த இப்படத்தினை கிரண் ராவ் இயக்கியிருந்தார். கடந்த மார்ச் மாதம் வெளியான லாபதா லேடீஸ் பாலிவுட்டில் நல்ல வரவேற்பினைப் பெற்றது.
திருமணமாகி ஒரே ரயில் பயணம் செய்யும் இரு மணமகள்கள் தவறுதலாக வெவ்வேறு மணமகன் வீட்டிற்குச் செல்கின்றனர். இதனால் ஏற்படும் குழப்பங்களும் அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகளுமே இப்படத்தின் கதை. சுவாராஸ்யமாக, காமெடியுடன் வெளியான இப்படம் இந்தியில் ஹிட் ஆனது.
இந்நிலையில் 2025-க்கான ஆஸ்கர் விருதுக்கு சிறந்த வெளிநாட்டுப் படப் பிரிவுக்கு இப்படமும் அனுப்பப்பட்டிருந்தது. அடுத்தடுத்த சுற்றுக்களில் நடுவர்களால் முன்னிலை பெற்ற நிலையில் இறுதியில் இப்படம் ஆஸ்கர் ரேஸிலிருந்து வெளியேறி இருக்கிறது. ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட 29 படங்களில் இறுதியில் 5 படங்கள் தேர்வானது.
அதில் தமிழில் வெளியான வாழை, தங்கலான் ஆகிய படங்களும் அடங்கும். மேலும் மலையாளத்தில் உள்ளொழுக்கு படமும் தேர்வானது. இதைத் தவிர சிறந்த இசைக்கான பிரிவில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான ஆடு ஜீவிதம் படமும் தேர்வானது.
தற்போது சிறந்த வெளிநாட்டுப் படப் பிரிவிலிருந்து லாபதா லேடீஸ் வெளியேறி உள்ளது. தற்போது லண்டனிலிருந்து எடுக்கப்பட்ட சந்தோஷ் என்ற இந்தித் திரைப்படம் இதே பிரிவில் தேர்வாகி உள்ளது.