சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவாகியிருக்கிறது. இது அடுத்த 2 நாட்களில், மேலும் வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில், தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரும். இதன் காரணமாக, வட கடலோர தமிழகத்தில் அனேக இடங்களிலும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் இன்றும், நாளையும் லேசான மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தள்ளது.
அதாவது வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, தமிழக கடல் பகுதியை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது. இந்த தாழ்வு பகுதியானது, கடற்பகுதியை நெருங்கும்போது தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற வாய்ப்பு இருப்பதாகவும், அதேநேரம் இது, புயலாக மாற வாய்ப்பு இல்லை என்றும் கூறுகின்றனர். கடற்பகுதி அருகே வந்த பிறகு, காற்றழுத்த தாழ்வு மண்டலம், மெதுவாக நகர்வதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்திரன் கூறினார்.
இதன் காரணமாக, இன்று நள்ளிரவு முதல் 19-ந் தேதி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், 20 செ.மீட்டர் அளவுக்கு மழை பெய்யும் என்றும் டெல்டா வெதர்மேன் ஹேமசந்திரன் தெரிவித்து உள்ளார். சென்னையில் தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும் அறிவுறுத்தியுள்ளார். அதேநேரம், வடகிழக்கு திசை நோக்கி நகரும்போது, அதி கனமழை பொழிவு கடலிலேயே நிகழ வாய்ப்புகள் இருப்பதாகவும், 19-ந் தேதிக்கு பிறகு, காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து, வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து ஆந்திரா, ஒடிசா நோக்கி நகரும் வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் இன்று சென்னை, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை 18 ஆம் தேதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.
நாளை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளதால் நிர்வாக ரீதியாக ஆரஞ்சு எச்சரிக்கையும் வழங்கப்பட்டு உள்ளது. ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில், 11 செ.மீட்டர் முதல் 20 செ.மீட்டர் வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதேநேரம், நாளை ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.