சென்னை: சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த ரவி ராகுல் என்பவர் சென்னை நுகர்வோர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் பழுது-சேவை குறைபாடு தொடர்பாக ஏ.சி. எந்திர தொகையை திரும்ப வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த ரவி ராகுல் என்பவர், நுகர்வோர் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த 2022-ம் ஆண்டு பெரம்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில், ரூ.35 ஆயிரத்துக்கு ஏ.சி. வாங்கினேன். ஏ.சி. வாங்கியது முதல் சரிவர இயங்கவில்லை. வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் செய்ததை தொடர்ந்து பழுதை சரி செய்தனர். இருந்தபோதும் மீண்டும் பழுதானது. எனவே, ஏ.சி. வாங்குவதற்காக செலுத்திய தொகையை திரும்ப வழங்கவும், சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு இழப்பீடாக தலா ரூ.1 லட்சமும் வழங்க உத்தரவிட வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த தீர்ப்பாயம், ‘மனுதாரர் வாங்கிய ஏ.சி. ஆரம்பம் முதலே சரிவர இயங்கவில்லை என்பது தெளிவாகிறது. இது, ஏ.சி.யை உற்பத்தி செய்த நிறுவனம், விற்பனை செய்த நிறுவனம் ஆகியவற்றின் சேவை குறைபாடு ஆகும்.
எனவே, இந்த 2 நிறுவனங்களும் சேர்ந்து ஏ.சி.க்கான தொகை ரூ.35 ஆயிரத்தை மனுதாரருக்கு திரும்ப வழங்க வேண்டும். மேலும், சேவை குறைபாட்டுக்கு இழப்பீடாக ரூ.10 ஆயிரமும், வழக்கு செலவாக ரூ.5 ஆயிரமும் வழங்க வேண்டும்’ என உத்தரவிட்டது.