பெங்களூர்: பெங்களூரில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் தற்கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த மனைவி, மாமியார் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
பெங்களூரு மாரத்தஹள்ளி, மஞ்சுநாத் லே-அவுட்டில் வசித்து வந்தவர் 35 வயதாகும் அதுல் சுபாஷ். இவரது மனைவி நிகிதா. இந்த தம்பதிக்கு 4 வயதில் மகன் உள்ளார். சாப்ட்வேர் என்ஜினீயரான அதுல் சுபாஷ், தனியார் நிறுவனத்தில் இயக்குனராக வேலை செய்தார். இந்த தம்பதியின் சொந்த ஊர் உத்தரபிரதேச மாநிலம் ஆகும். அதுல் சுபாசுடன் ஏற்பட்ட பிரச்சினையால் தனது மகனுடன் உத்தரபிரதேசத்தில் உள்ள பெற்றோருடன் நிகிதா வசித்து வந்துள்ளார்.
இதற்கிடையில், கடந்த 9-ந்தேதி மஞ்சுநாத் லே-அவுட்டில் உள்ள வீட்டில் அதுல் சுபாஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர், தனது தற்கொலைக்கு மனைவி நிகிதா, மாமியார் நிஷா, அவரது குடும்பத்தினர் காரணம் என்று கூறி 44 பக்க கடிதம் எழுதினார். அதில், தான் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக பொய் புகார் கூறி தன் மீது நிகிதா 8 வழக்குகள் தொடர்ந்து தொல்லை கொடுப்பதாக கூறினார்.
அத்துடன் தன்னிடம் ரூ.3 கோடி கேட்டு மிரட்டுவதாகவும், மகனை பார்க்க அனுமதிக்கவில்லை என்றும் அதுல் சுபாஷ் குற்றச்சாட்டு கூறி இருந்தார். எல்லாவற்றுக்கும் மேலாக தனக்கு நீதி வேண்டும் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிக்கு அதுல் சுபாஷ் இ-மெயில் அனுப்பியதுடன், 90 நிமிட வீடியோவும் சுபாஷ் வெளியிட்டு இருந்தார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துவதாகவும், ஆண்களை பாதுகாக்க தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் அதுல் சுபாசுக்கு ஆதரவாக கருத்துகளை நெட்டிசன்கள் வெளியிட்டனர்.
அதே நேரத்தில் அதுல் சுபாஷ் தற்கொலைக்கு காரணமான மனைவி நிகிதா, மாமியார் நிஷா, மைத்துனர் அனுராக், உறவினர் சுசில் சிங்கானியா ஆகிய 4 பேர் மீதும் மாரத்தஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அவர்களை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், அரியானா மாநிலம் குர்கிராமில் பதுங்கி இருந்த நிகிதாவையும், உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் தலைமறைவாக இருந்த அவரது தாய் நிஷா மற்றும் அண்ணன் அனுராக்கையும் நேற்று முன்தினம் பெங்களூர் மாரத்தஹள்ளி போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் நிகிதாவின் சித்தப்பா சுசில் சிங்கானியா தலைமறைவாக உள்ளார். அவரையும் கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.